×

கொரட்டூர் பகுதி கால்வாயில் அடைப்பு தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூர் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து  மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூர் பகுதியில் 84வது வார்டில் போத்தியம்மன் கோயில் தெரு உள்ளது. இங்கிருந்து  மண்ணூர்பேட்டைக்கு செல்லும் இணைப்பு சாலையில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இச்சாலையில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக  ஓடுகிறது. இதனால் சுகாதார கேடு நிலவுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கொரட்டூரில் இருந்து மண்ணூர்பேட்டைக்கு செல்லும் இணைப்பு சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான  பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் சென்று வருகின்றன. இச்சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலையில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீர் தெருவில் பல வாரமாக ஆறாக ஓடி வருகிறது. இதனால் பாதசாரிகள் அறவே நடமாட முடியவில்லை. மேலும் இதனை மீறி சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு  கால்களில் கழிவுநீர் தெளித்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு தோல்நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்லும்போது நடந்து செல்லும் பாதசாரிகள் மீது கழிவுநீர் தெளித்து அவர்களது  உடைகள் வீணாகிறது. மேலும், இந்த வழியாக பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லும்போது கழிவுநீர் தெளித்து சீருடைகளும் பாழாகிறது.

அது மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகளும் கழிவுநீரில் சிரமப்பட்டு தான் சென்று வருகின்றனர். மேலும் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்புகளுக்குள் படையெடுத்து வருகின்றன. இவைகள்  கடித்து பல்வேறு வகையான மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் புகார் கூறியுள்ள போதிலும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்  அலட்சியமாக உள்ளனர். இதனால் கொரட்டூர் பகுதி மக்கள் தொடர்ந்து சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர்.எனவே, இனிமேலாவது மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து கொரட்டூர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து  வெளியேறும் கழிவுநீரை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Korattur ,area canal ,
× RELATED ஒரே நாளில் பைக், செல்போன் பறித்த ரவுடி, வழிப்பறி கொள்ளையன் கைது