×

ஒரே நாளில் பைக், செல்போன் பறித்த ரவுடி, வழிப்பறி கொள்ளையன் கைது

அம்பத்தூர்: அரும்பாக்கம், கோயம்பேடு, கொரட்டூரில் ஒரேநாளில் பைக் மற்றும் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி மற்றும் பிரபல வழிப்பறி கொள்ளையன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயசாந்தி(19), திருமங்கலத்தில் உள்ள ஒரு பிரபல மாலில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், திருமங்கலத்தில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல அரும்பாக்கம் வழியாக செல்போன் பேசிக்கொண்டு நடந்து வந்தேன்.

அப்போது பின்னால் பைக்கில் வந்த இருவர் செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர் என குறிப்பிட்டிருந்தார். இதேபோல, வடமாநில இளைஞர் ஒருவர் அதே பகுதியில் நடந்து சென்றபோது அவரது செல்போனை இருவர் பறித்துச்சென்றுவிட்டதாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் கோயம்பேட்டில் இருவரிடம் செல்போனை பறித்துச்சென்றதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல், கொரட்டூர் பகுதியில் பைக் திருட்டு சம்பந்தமாக கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கொரட்டூர் பகுதியில் பைக் திருடிய இருவர் அதே பைக்கில் அரும்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் பைக் மற்றும் 4 பேரிடம் செல்போன் பறித்துச் சென்றது அடையாளம் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, பைக் நம்பரை வைத்து போலீசார் முகவரியை கண்டுபிடித்து நேற்று முன்தினம் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ரவுடி கார்த்திக்(30) என்பவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

இவர் கொடுத்த தகவலின்படி வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் கிஷோர்குமார்(28) என்பவரை வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் அரும்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது கொரட்டூர் பகுதியில் பைக்கை திருடி, அந்த பைக்கில் சென்று அரும்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் 4 பேரிடம் செல்போனை பறித்து சென்றதாக தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட கிஷோர்குமார் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்பட சுமார் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல் இவரது கூட்டாளி ரவுடி கார்த்திக் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு இருப்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஒரே நாளில் பைக், செல்போன் பறித்த ரவுடி, வழிப்பறி கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Arumbakkam ,Koyambedu ,Korattur ,Vijayashanthi ,Choolaimedu ,Chennai ,Tirumangalam ,
× RELATED இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: வாலிபர் சிறையில் அடைப்பு