சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ பதிவிட்டால் கடும் நடவடிக்கை

ஈரோடு, மார்ச் 5:  சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி சிறுமிகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவிடுவோர், பகிர்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் குறித்து தகவல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், முதற்கட்டமாக ஆபாச வெப்சைட்டுகள் முடக்கப்பட்டன. ஆனால், உலக நாடுகளில் இருந்து சமூக வலைத்தளங்கள் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியலுக்கு தூண்டும் வகையில் ஆபாச படங்கள், வீடியோக்கள் பதிவிடுவது அதிகரித்து வருகிறது.

இதில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பேஸ்புக் மூலம் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகளவில் பதிவிடுவதும், பகிர்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், இந்தியாவில் குழந்தைகள் மற்றும் சிறுமிகளை பாலியலுக்கு தூண்டும் வகையில் ஆபாச பட வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் சார்பில் ஆபாச படங்கள், வீடியோக்கள் பதிவிட்டவர்கள், பகிர்ந்தவர்கள் பட்டியலை டெல்லியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளுக்கு அளித்தனர். அதன்பேரில், நாடு முழுவதும் பலரை போலீசார்  கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதில், ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிட்டும், குழந்தைகளை பாலியல் தூண்டும் விதமாக சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தியதற்காகவும் ஈரோடு பாப்பாத்திக்காட்டை சோந்த ஓட்டல் உரிமையாளர் யோகேஸ்வரன்(35) என்பவர் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நம் நாட்டில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் சிறுமிகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவு செய்வது அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அந்நிறுவனத்தார் மூலம் அவர்களை கண்காணித்து, அவர்களது யுசர் ஐடி, ஐஎம்இ நம்பருடன் நம் நாட்டிற்கு தகவல் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டவர்கள், பகிர்ந்தவர்கள் எந்த மாநிலத்தில் உள்ளனரோ? அந்த மாநில தலைமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர், அவர்கள் வசிக்கும் மாவட்ட போலீசார் மூலம் கைது செய்யப்படுகிறார்கள். இதேபோல்தான், ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக பேஸ்புக்கில் சிறுமிகளில் ஆபாச படங்களை பதிவிட்ட யோகேஷ்வரனை சென்னை டிஜிபி, கோவை மண்டல ஐஜி.,க்கு அளித்த தகவலின் பேரில், மாவட்ட போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆபாச படங்கள், வீடியோக்கள் பதிவிட்டாலோ? அல்லது பகிர்ந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினர்.

Related Stories:

More
>