×

கரூரில் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடைக்கோடி தொண்டனின் நிலை, கவலைகளை அறிந்தவர் ஸ்டாலின்

கரூர், மார்ச் 4: கரூரில் நடந்த ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், கடைக்கோடி தொண்டனின் நிலை, கவலைகளை அறிந்தவர் ஸ்டாலின் என்று கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மேற்கு நகர திமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மேற்கு நகர துணைச் செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்றார். தாரணி சரவணன் தலைமை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அப்துல்லா, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.

இந்த கூட்டத்தில், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் கே.சி.பழனிசாமி, மாநில நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ், நெசவாளர் அணிச் செயலாளர் பரணிமணி, மாவட்ட நிர்வாகிகள் மகேஸ்வரி, ரமேஷ்பாபு, நகரச் செயலாளர்கள் கனகராஜ், சுப்ரமணி, கணேசன், செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் பிரபு உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். வார்டு நிர்வாகி அம்பிகாபதி நன்றி கூறினார்.

கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
கலைஞருக்கு கிடைக்காத எல்லாம் ஸ்டாலினுக்கு கிட்டி வருகிறது. கலைஞர் பெறாத வெற்றியை ஸ்டாலின் பெற்று வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் இரண்டு சக்திகளை எதிர்த்து, 39 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்திய அளவில் 3வது பெரிய கட்சி என்ற நிலையை அடைந்துள்ளோம். இதுபோன்ற வெற்றி இந்திய அரசியல்வாதிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடைக்கோடி தொண்டர்களின் நிலை, கவலைகள் போன்றவற்றை தெரிந்து செயல்படுபவர் ஸ்டாலின். பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு 36 சதவீத வாக்குகள்தான் கிடைத்துள்ளது. மீதி 64 சதவீதத்தினர் எதிர்ப்பில் உள்ளனர். மம்தா, ஜெகன்மோகன்ரெட்டி போன்றவர்கள் தங்களின் மாநிலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு முதல்வருக்குத்தான் அழைப்பு விட வேண்டும். ஆனால், ஸ்டாலினுக்குத்தான் அழைப்பு விடுத்திருந்தனர். எடப்பாடியை அழைக்கவில்லை. வடக்கே தலை வைத்துக் கூட படுக்க கூடாது என அண்ணா சொல்லியிருக்கிறார். ஆனால் இங்குள்ளவர்கள் அங்கேயே படுத்து கிடக்கின்றனர் என்றார்.

Tags : Stalin ,birthday party ,Karun ,
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...