×

விவசாய பயன்பாட்டிற்கான மின்சாரத்தை வேலிக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

ஈரோடு, மார்ச் 4: விவசாய பயன்பாட்டிற்கான மின்சாரத்தை வேலிக்கு பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோட்ட பகுதிகளில் மின்சாரம் தாக்கி வன உயிரினங்கள் இறப்பதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பேசியதாவது:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் நேரடி மின் இணைப்பு கொடுப்பதன் மூலம் யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் இறப்பதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்சாரத்துறை மற்றும் வனத்துறை இணைந்து கூட்டுக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாய பயன்பாட்டிற்கான மின் இணைப்பை தவறாக வேலிக்கு பயன்படுத்துவோர் மீது மின்துறை மூலமாகவும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் மூலமாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பை தவிர்க்க விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதன், வன அலுவலர்கள் விஷ்மிஜூ விஸ்வநாதன், அருண்லால், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பாலகணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்