×

பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்களுக்கு சலுகை

புதுச்சேரி, மார்ச் 4: புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட இடங்களில் உள்ள சில குடியிருப்புகள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவுநீரை பாதாள சாக்கடையில் இணைக்காமல் திறந்தவெளி மழைநீர் வாய்க்காலில் இணைத்து விடுகின்றனர். இதனால் நகரப் பகுதிகளில் கொசு உற்பத்தி மற்றும் சுகாதாரகேடு ஏற்படுகிறது.

இத்தகைய சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில் பாதாள சாக்கடை இணைப்புகளை பெற ஊக்குவிக்கும் நோக்கில் பொதுப்பணி துறைக்கான பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மற்றும் நகராட்சியின் சாலை வெட்டுவதற்கான கட்டணம் ஆகியவற்றை 5ம் தேதி (நாளை) முதல் 31-8-2020 வரை குடியிருப்புகளுக்கு மட்டும் தள்ளுபடி செய்ய புதுச்சேரி அரசு முன்வந்துள்ளது.

பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்களை கண்டறிவதற்காக நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, பாதாள சாக்கடை இணைப்பு வேண்டுபவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாதாள சாக்கடை இணைப்பு பெற வேண்டுவோர் அனுபவம் வாய்ந்த பிளம்பர் மூலமாக இணைப்பு பெற கேட்டுக் கொள்கிறோம். பாதாள சாக்கடை இணைப்பு பெறாத வர்த்தக நிறுவனங்கள் உடனடியாக பொதுப்பணி துறையை அணுகி விண்ணப்பித்து உரிய கட்டணம் செலுத்தி இணைப்பு பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஊழியர்கள் மூலமாக விநியோகிக்கப்படும் அறிவிப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல் இருப்பவர்களின் கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நகராட்சி சட்ட விதி 232(பி)-ன்படி அடைக்கப்படும். மேலும், இணைப்பு பெறாதவர்கள் மீது நகராட்சி சட்ட விதி 323ன்படி தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் மேற்கூறிய சலுகையை பயன்படுத்தி உடனடியாக பாதாள சாக்கடை இணைப்பு பெற்று புதுச்சேரியை தூய்மையான மற்றும் கொசு உற்பத்தி இல்லாத நகரமாக மாற்ற அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு, உழவர்கரை நகராட்சி- 0413 2200382, வாட்ஸ்அப் எண் 7598171674, புதுச்சேரி நகராட்சி- 0413 2227518, பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம்- 0413 2336068 கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களில் (அலுவலக நேரங்களில் மட்டும்) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...