×

பில் இல்லாமல் விற்பனையா? நெல்லை ஸ்வீட் கடையில் வருமான வரித்துறை சோதனை ஆவணங்களை கைப்பற்றி விசாரணை

நெல்லை, மார்ச் 4:  நெல்லை பாளையங்கோட்டையில் ஸ்வீட் கடை மற்றும் குடோனில் வருமான வரித்துறையினர் பல மணி நேரம் சோதனை நடத்தினர். பில் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறதா என பார்வையிட்டனர். இதில் ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. நெல்லை ‘அல்வா' என்றாலே அதற்கு தனி பெயரும் சுவையும் உண்டு. இங்கு தயாராகும் அல்வா வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நெல்லை பாளையங்ேகாட்டை தெற்கு பஜாரில் அமைந்துள்ள ஒரு ஸ்வீட் கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள இரண்டு ஸ்வீட் கடைகள், தெற்கு பஜாரில் அமைந்துள்ள குடோன், சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ள வீடு ஆகியவற்றில் ஒரே ேநரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்தனர்.

வருமான வரித்துறை கூடுதல் ஆணையாளர் மோண்டே தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் நான்கு குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவிலும் நீடித்தது. சோதனையின் போது தெற்கு பஜாரில் உள்ள கடையில் வியாபாரம் வழக்கம் போல் நடந்தது. ஸ்வீட் மற்றும் பண்டங்களுக்கு பில் வழங்கப்படுகிறதா, எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை இரு அதிகாரிகள் முன்னின்று கண்காணித்தனர். இந்த சோதனையில் ஆவணங்கள் சிலவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பும் இந்த கடை மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் மீண்டும் நடந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவில் நெல்லை பேட்டையில் இயங்கி வரும் பிரபல ஊறுகாய் நிறுவனத்திலும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Investigation ,Income Tax Department ,Paddy Sweet Shop ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...