×

உயர் தொழில் நுட்ப சம்பங்கி சாகுபடி

தா.பழூர், மார்ச் 3: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் அழகு மலர்களில் சம்பங்கியானது அதனுடைய வெண்மையான மற்றும் மெல்லிய நறுமணத்துக்காக விரும்பி பயிரிடப்படுகின்றது. மற்ற வணிக மலர்களை விட இவை நீண்ட காலம் கெட்டு விடாமல் இருப்பதால் நீண்ட தூரச் சந்தைகளுக்கு இவற்றை எடுத்துச் செல்ல இயலும். சம்பங்கி மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணெய், வாசனை மெழுகு முதலியவை நறுமணப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் பயன்படும் முக்கிய விலையுயர்ந்த பொருட்களாகும். வட மாநிலங்களில் சம்பங்கியானது பெரும்பாலும் வணிக மலராக அலங்காரத்திற்காகப் பயன்படுகின்றது. ஆனால் தென்னிந்தியாவில் இம்மலர்கள் உதிரிப்பூக்களாக மாலைகள் தொடுப்பதிலும், நறுமண எண்ணெய்கள் தயாரிப்பதிலும் பயன்படுகின்றன.

சம்பங்கியில் மெக்சிகன் ஒற்றை, பிரஜ்வால் மற்றும் கல்கத்தா ஒற்றை பூ ரகங்கள், பம்பாய், கொல்கத்தா அடுக்கு ரகங்கள் என இரண்டு காணப்படுகின்றன. பிரஜ்வால் ஒற்றை மலர்களை தரக்கூடியது இந்த வீரிய ஒட்டு ரகம். மொட்டுகள் ரோஸ் கலரில் காணப்படும். மலர்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும். இது சிருங்கார் ரகத்தை விட 20 சதவீதம் அதிக மகசூல் தரக்கூடியது. வருட மகசூல் 6.2-6.6 டன்கள் மற்றும் ஏக்கர். சம்பங்கியானது கிழங்குகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது. நல்ல திடமான , ஒரே அளவான 25 முதல் 30 கிராம் எடையுள்ள கிழங்குகளைத் தேர்ந்தெடுத்து நடவு செய்ய வேண்டும். முந்தைய பயிரின் அறுவடை முடிந்ததும், செடிகளில் உள்ள இலைகள் காய ஆரம்பித்தவுடன் கிழங்குகளை தோண்டி எடுக்க வேண்டும். கிழங்கில் ஒட்டி இருக்கும் மண், வேர் போன்றவற்றை நீக்கிச் சுத்தம் செய்த பின் நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு கிழங்கு முடிச்சுகளில் ஒவ்வொரு கிழங்கையும் தனித்தனியாக பிரித்தெடுத்து அதன் அளவைப் பொறுத்து வகைப்படுத்த வேண்டும். கிழங்குகளை தோண்டி எடுத்ததும் உடனடியாக நடாமல் ஒன்று முதல் ஒன்றரை மாதம் வரை பாதுகாத்து வைத்திருந்து விட்டு பின்னர் நடவு செய்ய வேண்டும்.

நடுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே, நடவு செய்ய தயார்படுத்த வேண்டும். 2 அல்லது 3 முறை நிலத்தை ஆழமாக நன்கு உழுது பக்குவப்படுத்த வேண்டும். கடைசி உழவின்போது நன்கு மக்கிய தொழு உரம் அல்லது எருவினை ஒரு ஏக்கருக்கு 10 டன் என்ற அளவில் போட்டு மண்ணுடன் நன்கு கலந்து விட வேண்டும். பார்களை 45 செ.மீ இடைவெளியில் அமைத்துக் கொள்ள வேண்டும். கிழங்குகளை 15-20 செ.மீ இடைவெளி இருக்குமாறு 2 1/2 செ.மீ ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நடவு செய்யும் போது ஒரு ஏக்கருக்கு 44,800 கிழங்குகள் தேவைப்படும். சைக்கோசெல் என்னும் மருந்தை லிட்டருக்கு 5 மிலி என்ற அளவில் கலந்து அதில் கிழங்குகளை அரை மணி நேரம் நனைத்து நடுவதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம். மேலும் கிழங்குகளை நடுவதற்கு முன்பு பிலிட்டாக்ஸ் (2 மிலி/ஒரு லிட்டர் தண்ணீருக்கு ) என்ற மருந்தில் நனைத்து நடுவதன் மூலம் பூஞ்சாண நோய் தாக்காமல் பாதுகாக்கலாம்.
சம்பங்கியில் தரமான மற்றும் அதிகமான மகசூலை பெற சரியான முறையில் உர நிர்வாக செய்ய வேண்டியது மிக முக்கியமாகும்.

ஏக்கருக்கு யூரியா 173 கிலோ சூப்பர் பாஸ்பேட் 500 கிலோ பொட்டாஷ் 132 கிலோ சூப்பர் பாஸ்பேட் முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை மூன்று சம பாகங்களாக பிரித்து இட வேண்டும். அவற்றை முறையே நடும் போது ஒரு முறையும், நட்ட 30 நாட்கள் கழித்தும் பின்பு நட்ட 90 நாள் கழித்தும் இட வேண்டும். உரங்களை பார்களின் பக்கவாட்டில் போட்டு கலந்து விட்டு உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும். கிழங்குகள் முளைக்கும் தருணத்தில் அளவுக்கதிகமாக நீர் பாய்ச்சி, நிலத்தில் அதிக ஈரப்பதம் இருந்தால் கிழங்குகள் அழுகி விடும். மிதமான ஈரத்தில் கிழங்குகளை நடவ செய்த பின் கிழங்குகள் முளைக்கும் வரை நீர் பாய்ச்சக் கூடாது. கிழங்குகள் முளைத்தவுடன் நீர் பாசனத்தை 5-7 நாட்கள் இடைவெளியில் நிலவும் தட்ப வெப்ப சூல்நிலை மற்றும் நிலத்தின் தன்மையைப் பொறுத்து அளித்தல் அவசியம். நிலத்தில் அவ்வப்போது களைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சராசரியாக மாதம் ஒரு முறையாவது களை எடுக்க வேண்டும். நடுமுன் அட்ரசீன் என்னும் களைக்கொல்லியை ஏக்கருக்கு 1.25 கிலோ என்ற அளவில் பயன்படுத்தியும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். சம்மங்கி மலர்கள் உற்பத்திக்கு, மலர் காம்புகளிலிருந்து முதல் இணை மலர்கள் மலர்ந்தவுடன் அறுவடை செய்யப்படுகின்றது. உதிரிப்பூக்களாக பயன்படுத்த மொட்டுகள் நன்கு முதிர்ச்சி அடைந்த நிலையில் காலை வேளைகளில் அறுவடை செய்யப் படுகிறது.

Tags : Sampangi ,
× RELATED தர்மபுரி அருகே சம்பங்கி பூ விளைச்சல் அமோகம்