×

கடமலைக்குண்டு அருகே குண்டும், குழியுமான கிராமச் சாலை விளைபொருட்களை கொண்டு செல்ல விவசாயிகள் அவதி

வருஷநாடு, மார்ச் 2: கடமலைக்குண்டு அருகே, குண்டும், குழியுமான கிராமச் சாலை வழியாக, விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். கடமலைக்குண்டு அருகே, பொன்னன்படுகை கொங்கரவு கிராமம் முதல் சிதம்பரம்விலக்கு கிராமம் வரை குண்டும் குழியுமாக சாலை உள்ளது. இதனால் அப்பகுதியில் விளையும் முருங்கை, அவரை, தக்காளி, பப்பாளி, கத்தரி உள்ளிட்ட விளைபொருட்களை தேனி ஆண்டிபட்டி, மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

காலை, மாலை வேளைகளில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும், பராமரிப்பு பணி செய்வதற்கும், விவசாயிகள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும்போது வாகனங்களில் டயர்களை ஜல்லிக்கற்கள் பதம் பார்ப்பதாக கூறுகின்றனர். இதனால், குறிப்பிட்ட நேரத்துக்கு சந்தைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என்கின்றனர். எனவே, சம்மந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயி சுகுமாரன் கூறுகையில், ‘சாலை குண்டும், குழியுமாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து இருப்பதால், தினசரி வாகனப் போக்குவரத்துக்கு அவதியாக உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Kadamalai kundu ,
× RELATED கடமலைக்குண்டு அருகே பள்ளி ஆண்டு விழா