×

30 ஆயிரத்து 522 பேர் எழுதுகின்றனர் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது


கடலூர், மார்ச் 2: பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகிறது. 8 பறக்கும் படைகளும், 264 உறுப்பினர்கள் கொண்ட நிலை கண்காணிப்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 229 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 73 மாணவர்களும், 16 ஆயிரத்து 449 மாணவிகளும் என மொத்தம் 30 ஆயிரத்து 522 பேர், 108 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தனித்தேர்வர்களுக்காக 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை நடத்துவதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் தலைமையில் 8 பறக்கும் படைகளும், 264 உறுப்பினர்கள் கொண்ட நிலை கண்காணிப்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அறை கண்காணிப்பாளர்கள் தங்களுடைய பணியில் எவ்வித குந்தகமும் ஏற்படாத வண்ணம் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் கழிவறை வசதி போதுமான அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாணவர்கள் தேர்வறைக்கு செல்லும் முன் தங்கள் காலணிகள், பெல்ட்டுகள் முதலியவற்றை அறைக்கு வெளியே வைத்து விட்டு செல்ல வேண்டும். தங்கள் உடைகளில் விடைக்குறிப்புகள் போன்ற எந்த துண்டு சீட்டுகளும் வைத்திருக்கக்கூடாது. அவ்வாறு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் தேர்வு மையத்திற்கு எளிதாக செல்லும் பொருட்டு போதுமான வகையில் அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வர்களுக்கு வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கப்படும். வழங்கப்படும் விடைத்தாளில் உள்ள தேர்வெண் பெயர், புகைப்படம் போன்றவை தன்னுடையதுதானா என்பதை சரி பார்த்து கொண்டு கையொப்பமிட்டு 5 நிமிடங்களுக்கு பின் தேர்வை எழுத ஆரம்பிக்க வேண்டும். தேர்வர்கள் விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும் தமது தேர்வெண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதுதல் கூடாது என அறுவுறுத்தப்பட்டுள்ளது.

நடமாடும் மருத்துவ முகாம்கள்:
தேர்வு எழுதும் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதும் அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கேயே தேர்வு எழுதுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இம்முறை மாணவர்கள் யாரேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக தேர்வு மையத்திற்கே வந்து சிகிச்சை அளிக்க வசதியாக நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிதம்பரம்: சிதம்பரம் கல்வி மாவட்டத்தின் கீழ் சிதம்பரம் நகரம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட ஒன்றியப பகுதிகள் வருகிறது. சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 51 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 892 மாணவர்களும், 3 ஆயிரத்து 497 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 389 மாணவ மாணவிகள், இன்று 12ம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர். முதன்மை கண்காணிப்பாளர்கள் 24 பேரும், துறை அலுவலர்களும் 24 பேரும், வழித்தட அலுவலர்கள் 4 பேரும், 362 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 62 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட உள்ளனர். பொது தேர்வு நடைபெறும் மையங்களில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Tags : starts ,election ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...