×

விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலை விரிவாக்க பணி கிடப்பில் கிடக்கும் அவலம்

சேத்தியாத்தோப்பு, மார்ச் 2:  விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூரில் துவங்கி பரங்கிப்பேட்டை வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சேலம் முதல் விருத்தாசலம் வரை உள்ள சாலையை அகலப்படுத்தும் பணி முடிந்து விட்டது. இதன் தொடர்ச்சியாக விருத்தாசலத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வரையிலான சாலை பணி முடிவடையாமல் பாதியில் நிற்கிறது. சுமார் 36 கி.மீட்டர் தூரமுள்ள சாலையில் சுமார் 20 கி.மீட்டர் தூரம் வரை பகுதி, பகுதியாக பிரித்து சாலை பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சாலை பணி எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இச்சாலை அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டது. ஆனால் இன்னும் சாலை பணி முடிந்தபாடில்லை. இதில் எறும்பூரில் இருந்து பரங்கிப்பேட்டை வரையிலான 20 கிலோ மீட்டர் சாலை பணி முழுமை பெறவே இல்லை.

இது குறித்து புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், பல முறை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தும், கடலூர் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. மேலும் சிறு பாலங்கள் கட்ட வேண்டிய இடங்களில் நிதி சிக்கனம் கருதி ஒப்பந்ததாரர்கள் பாலங்களை ஏற்படுத்தாமல் சாலை பணியை செய்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் விவசாயிகள் முறையிட்டதை தொடர்ந்து, பாலம் கட்ட வேண்டிய இடங்களில் குறுகிய பாலம் அமைத்து தரப்படும் என்ற வாக்குறுதி அளித்ததோடு, புதிதாக போடப்பட்ட சாலை மீண்டும் பெயர்க்கப்பட்டு குறுகிய பாலம் கட்டுவதற்கு சாலை தோண்டப்பட்டது. ஆனால் பாலம் அமைக்கும் பணி முடிவடையவில்லை. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து புழுதி பறக்கிறது. சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் இயங்கி வரும் அரசு பால் குளிரூட்டும் நிலைய பகுதியில் அதிகளவில் புழுதி பறப்பதை தடுக்க இச்சாலை பணியில் ஈடுபட்டுள்ள நகாய் திட்ட ஊழியர்கள் சாலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து வந்தபோதிலும் மீண்டும் புழுதி பறக்கிறது. விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலை விரிவாக்க பணிக்காக ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் சாலை பணி 50 சதவீதம் முடிந்த நிலையில் பாதியிலேயே நிற்கிறது. எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : road extension workshop ,Virthasalam-Parangipettai ,
× RELATED பொதுமக்கள் ஆச்சர்யம் மாவட்டம்...