×

வீடு, கட்டிடங்களாக மாறிய 10 ஆயிரம் ஏக்கர் பெரியாறு பாசன நிலம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மதுரை, மார்ச் 2: மதுரை மாவட்டத்தில் நெல் விளையும் பசுமை நிலமாக இருந்த பெரியாறு பாசன நிலம் 10 ஆயிரம் ஏக்கர் வீடு, கட்டிடங்களாக உருமாற்றம் அடைந்துள்ளதாக வேளாண் துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வேளாண்மை மேலோங்கி இருந்த மதுரை மாவட்டத்தில் வேளாண் நிலங்கள் சுருங்கி வருகின்றன. முல்லைப்பெரியாறு, வைகை, குண்டாறு, சாத்தையாறு போன்ற பாசனத்தை நம்பி பெரும்பாலான வேளாண்மை உள்ளது. இதில் பிரதானமாக அமைந்த பெரியாறு பாசன ஆயக்கட்டு ஆண்டுக்கு இருபோகம் நெல் விளையும் பூமி 43 ஆயிரம் ஏக்கர் பசுமையானது. இதுதவிர, ஒருபோக பாசன ஆயக்கட்டு மேலூர் பகுதியில் 85 ஆயிரம் ஏக்கரும், திருமங்கலம் கால்வாய் பாசனத்தில் 15 ஆயிரம் ஏக்கரும் உண்டு.
பெரியாறு அணையில் 2014 வரை 35 ஆண்டுகளாக 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க முடியவில்லை. 142 அடி வரை தேக்க அனுமதி கிடைத்தும் பருவ மழை அடிக்கடி ஏமாற்றுகிறது. இதனால் ஆண்டுக்கு இருபோகம் நெல்சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் பெரும்பாலும் ஒருபோகம் மட்டுமே விளைகிறது. அதிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சில ஆண்டுகளில் இருபோகமும் பொய்த்து வறட்சி தலைதூக்குகிறது. இந்த சூழலில் பசுமை வயல்வெளிகள் சுருங்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வேளாண் துறையினர் மதுரை மாவட்ட பெரியாறு இருபோக ஆயக்கட்டு பகுதியில் ஆய்வு நடத்தினர்.

இதில் கண்டறியப்பட்ட தகவல்கள் வருமாறு: பேரணை முதல் கள்ளந்திரி மதகு வரையிலான இருபோக ஆயக்கட்டு நிலங்களாகும். இதில் மதுரை நகரில் இருந்து அழகர்கோவில் வரை 22 கி.மீ. தூர சாலை, நத்தம் சாலையில் சத்திரப்பட்டி வரை, மேலூர் ரோட்டில் சிட்டம்பட்டி வரை, வாடிப்பட்டி சாலை, அலங்காநல்லூர் சாலை, சிவகங்கை சாலையில் கருப்பாயூரணி தாண்டி ஒத்தப்பட்டி, காளிகாப்பான், புதுத்தாமரைப்பட்டி போன்ற பகுதிகளில் நெல்விளையும் வயல்வெளிகள், தோட்டங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு பிளாட்டுகளாக உருமாற்றம் பெற்று வீடு, வர்த்தக கட்டிடங்கள், கல்வி நிறுவனங்களாக காட்சி அளிக்கின்றன. இம்மாதிரி சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வயல்வெளிகள் காலியாகி விட்டன.

இதுதவிர, மானாவாரி கண்மாய், கிணற்று பாசன விளைநிலங்கள், தோட்டங்களின் பரப்பும் குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் வயல்வெளிகள் மேலும் அழியும் அபாயம் அதிகரிக்கும். இவ்வாறு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Tags : buildings ,Periyar ,houses ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...