×

இந்த நாள் ஒட்டன்சத்திரம், நத்தம், வதிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தர்ணா போராட்டம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 1: ஒட்டன்சத்திரம், நத்தம், வத்தலக்குண்டுவில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் தீவிர போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். குடிமக்களின் தேசிய பதிவை ரத்து செய்ய வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவை ஏற்கமாட்டோமென வலியுறுத்தி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கேரளா, ராஜஸ்தான், புதுவை மாநிலங்களில் மத்திய அரசின் இச்சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இச்சட்டங்களை அமல்படுத்த மாட்டோமென சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், இச்சட்டம் தொடர்பாக நடந்த சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தர்ணா, மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் யூனியன் அலுவலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. நெல்லை பைசல் அப்துல் ரசீத் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுவதன் அவசியத்தை பற்றியும், குடியுரிமையை நிலைநாட்டுவதின் அவசியம் குறித்தும், வருங்கால சந்ததிகள் இந்தியாவில் நிம்மதியாக வாழ்வதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றியும் எடுத்தார். இதில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நத்தத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பல் பஸ்நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் மசூத் உஸ்மானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டியும், தமிழக அரசு இச்சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் உரை நிகழ்த்தினர். தொடர்ந்து புதுடில்லியில் ஜனநாயக முறைப்படி அமைதி வழியில் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது வன்முறையை தூண்டி விட்டு தாக்குதல் நடத்தி மனித உயிர்கள் பலியாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு குழு அமைத்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அருகே தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் இம்தியாஸ் தலைமை வகிக்க, மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அலாவூதீன் முன்னிலை வகித்தார். தமுமுக தலைமை கழக பேச்சாளர் பாரூக், மாவட்ட பொறுப்பாளர் முகமது ரிஜால் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து திமுக நிர்வாகி அக்கீம், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கணவாபீர், நகர தலைவர் அப்துல்அஜீஸ், அமமுக தலைமை கழக பேச்சாளர் நசீம், சமூக ஆர்வலர் முகமதுரபீக் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். இதில் செயின் என்ற சையதுஇப்ராகிம், நிர்வாகிகள் ஜெய்லானி, சதான்உசேன், அக்கீம்சேட், இத்திரிஸ், ஜாபர்மைதீன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் ஒருமணி நேரம் நடந்தது. தமுமுக நிர்வாகி அன்சாரி தாரிக் நன்றி கூறினார்.

Tags : Darna ,
× RELATED கணவரின் 2வது திருமணத்தை தடுக்க கோரி 4...