×

தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த மின்கம்பி உயிர்பலி ஏற்படும் முன் சீரமைக்கப்படுமா?

முத்துப்பேட்டை, பிப்.20: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குதெரு செக்போஸ்ட் எதிரே ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்தநிலையில் இப்பகுதியில் செல்லும் உயர்மின் அழுத்த கம்பி கைக்கு எட்டும் உயரத்தில் தாழ்வாக தொங்குகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை மின்சார வாரியத்தில் புகார் தெரிவித்தும் எந்த பலனுமில்லை. இதனால் நாளுக்குநாள் மின் கம்பி இறங்கி மிகவும் தாழ்வாகி தொங்குகிறது. இவ்வழியாகத்தான் அப்பகுதி மக்கள் அதிகளவில் கடைதெருக்கு சென்று வருகின்றனர். அதேபோல் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அருகேயுள்ள பள்ளி வாசலுக்கு சிறுவர் சிறுமிகள் சென்று வருகின்றனர். மேலும், தெருவில் உள்ள குழந்தைகளும் இப்பகுதியில்தான் தினந்தோறும் விளையாடி வருகின்றனர்.இந்தநிலையில் லேசான காற்று வீசினாலே தாழ்வாக செல்லும் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி பொறி கொட்டி வருகிறது. பலமான காற்று வீசும் பட்சத்தில் பெரியளவில் விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகவே இப்பகுதி மக்கள் நலன்கருதி தாழ்வாக செல்லும் உயர் மின் அழுத்த கம்பியை உயர்த்தி அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED எட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்