×

பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்

திருவாரூர், மே 7: திருவாரூர் மாவட்டத்தில் வெப்ப அலையுடன் வெயில் சுட்டெரித்து வருவதால் பட்டாசு தயாரிப்பு தொழிலாளர்களின் பாதுகாப்பினை அதன் உரிமையாளர்கள் உறுதி செய்திடுமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 105 டிகிரி முதல் 115 டிகரி வரையில் கடந்த 2 மாத காலமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன்காரணமாக திருவாரூர் மாவட்டத்திலும் 105 டிகிரி வரையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள், கல்லு£ரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் குறிப்பாக கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைவரும் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதன்படி, நேற்றும் வெப்ப அலையுடன் கூடிய 105 டிகிரி அளவில் வெயில் சுட்டெரித்ததால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இந்நிலையில் இந்த வெயில் காலத்தின் போது வழக்கத்தை விட கூடுதலான அளவில் மனிதர்கள் உடலில் வெப்பம் அதிகரிப்பதையொட்டி காய்ச்சல், அம்மை, மயக்கம் மற்றும் சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவுதண்ணீர் குடிக்க வேண்டும், தாகம் எடுக்காவிட்டாலும் கூட போதுமானஅளவு தண்ணீர் அருந்த வேண்டும், பயணத்தின் போது குடி நீரை எடுத்துச் செல்லவேண்டும், எலுமிச்சை ஜூஸ், இளநீர்,மோர்,புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகளை பருகி நீரிழப்பை தவிர்க்க வேண்டும், பருவக்கால பழங்கள்,காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்தஉணவுகளை உண்ண வேண்டும், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், மதிய நேரத்தில் வெளியில் செல்லும் போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்தும், குடை (கருப்புநிறத்தைதவிர்த்து) எடுத்து செல்ல வேண்டும், மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும், குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்தி விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதுடன் தினந்தோறும் குளிர்ந்தநீரில் குளிக்கவைக்க வேண்டும்.

போதிய இடைவேளைகளில் குழந்தைகள் நீர் அருந்துவதை உறுதி செய்துகொள்ள வேண்டும், குழந்தைகளுக்கான வெப்ப தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும், குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப் பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழிப்பை குறிப்பதாகும். முதியவர்களுக்கு வெப்பத்தினை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் என்பதுடன் குளிர்ந்தநீரில் குளிக்கவைக்க வேண்டும், வெப்ப அலையால் கர்ப்பிணிகளுக்கு அதிகபாதிப்பு ஏற்படும் என்பதால், கூடுதல் கவனத்துடன் அவர்களை கவனித்துக் கொள்ளவேண்டும், கர்ப்பகாலத்தில் சாதாரணமாகவே நீர்குடித்தால் வாந்திவரும் என்பதால் பலபெண்கள் நீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். இதனால் பிரசவிப்பதே பெரும் சிக்கலுக்குள்ளாகி, குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். பனிக்குடத்தில் குழந்தைக்கு தேவையான நீர் இருக்க வேண்டுமென்பதால், கர்ப்பிணிகள் சிரமப்பட்டாவது அடிக்கடி போதிய நீர் குடிக்கவேண்டும்.

வீடுகளில் சமையல் கேஸ் அடுப்புகளையும், விறகு அடுப்புகளையும் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். மேலும் மாவட்டத்தில் வலங்கைமான் தாலுக்கா பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் அங்கு தீ விபத்துகள் ஏற்படா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் அரசு விதி முறைகளின் படி, வெடி பொருட்கள் தயாரிப்பு மற்றும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும், கண்டிப்பாக வீடுகளில் இருப்பு வைக்க கூடாது. மேலும் பட்டாசு தயாரிப்பு தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் இருப்பதை அதன் உரிமையாளர்கள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Collector ,Saru ,Thiruvarur district ,Tamil Nadu ,
× RELATED கணினி மயமாக்கும் பணி காரணமாக இன்று 501 ரேஷன் கடைகள் இயங்காது