×

குறைந்து வரும் வெற்றிலை சாகுபடி

கரூர், பிப்.20: வெற்றிலை விவசாயத்திற்கு அரசு ஊக்கம் இல்லாததால் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்துவருகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.கரூர் மாவட்டம் புகழூர், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி ஆயிரக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகழூர் பகுதி மற்றும் கரூர் வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் விளையும் வெற்றிலைகள் வேலாயுதம்பாளையம் வெற்றிலை மண்டிக்கும், வேலூரில் உள்ள தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டிற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.மேற்கண்ட வெற்றிலை மண்டிகளுக்கு திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், மோகனூர், பரமத்தி போன்ற நாமக்கல் மாவட்ட விவசாயிகளும் விற்பனைக்காக வெற்றிலை கொண்டு வருகின்றனர்.இங்கு நடைபெறுகின்ற வெற்றிலை ஏலத்தில் கலந்துகொள்வதற்காக கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை போன்ற ஊர்களில் இந்து மொத்த வியாபாரிகள் வந்து வெற்றிலை ஏலம் எடுத்து லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் அனுப்பப்படுகிறது. மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உபி, மராட்டியம், உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வெற்றிலை அனுப்பப்படுகிறது. வெற்றிலை சாகுபடியை மேம்படுத்த அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் கூறுகையில்,புகழூர் வட்டாரத்தில் தொன்று தொட்டு வெற்றிலை பயிரிட்டுவருகிறோம். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இதைத்தவிர வேறுதொழில் தெரியாது என்பதால் இந்ததொழிலை தொடர்ந்து செய்துவருகிறோம். வெற்றிலை விவசாயத்திற்கான அரசால் அளிக்கப்படும் முக்கியத்துவம் நாளுக்குநாள் குறைந்து கொண்டேபோகிறது. நிலத்தை குத்தகைக்கு எடுத்துத்தான் சாகுபடி செய்கின்றனர். சொட்டுநீர்பாசனம் 100சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

இருந்தாலும் பயிரிடுபவர் பெயரில் சிட்டா பட்டா அடங்கல் போன்ற சான்றிதழ்களை கேட்கின்றனர். இதில் விதிகளை தளர்த்தவேண்டும்.முன்பெல்லாம் புகழூர் வட்டாரத்தில் மட்டும் சுமார் 150ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடைபெற்றது. இன்றைய நிலையில் வெற்றிலை சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்துவிட்டது. காரணம் காவிரியில் வெள்ளநீர் தான் வந்துகொண்டிருக்கிறது. கர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய நீரைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடகஅணைகள் நிரம்பியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வந்த நீரைப்பயன்படுத்தி சாகுபடி செய்தோம்.தற்போது நிலத்தடிநீரை பயன்படுத்தி தற்போது கொடிக்கால் பயிர் வளர்த்து வருகிறோம். கரூர் மாவட்டத்தில் மழை அளவு குறைவாகவே இருக்கிறது. மேலும் கோடைகாலம் துவங்க இருப்பதால் தண்ணீர் பிரச்னை அதிகமாக ஏற்படும், ஒவ்வொருமுறையும் பயிர்கருகி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.




Tags :
× RELATED கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை