×

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கிலோ ₹58க்கு துவரை கொள்முதல்

கிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உள்ள ஒருங்குமுறை விற்பனை கூடங்களில் வருகிற ஏப்ரல் 22ம் தேதி வரை துவரை கிலோ ஒன்றிற்கு ₹58 என கொள்முதல் செய்யப்படும் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பு 2019-20ம் ஆண்டு காரீப் பருவத்தில் பயறு வகை விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8152 ஹெக்டேர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டு, துவரை அறுவடை பணி தற்போது துவங்கப்பட்டு வரும் நிலையில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், தர்மபுரி விற்பனைக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக துவரை கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக 200 டன், போச்சம்பள்ளி விற்பனை கூடம் மூலம் 400 டன், ஓசூர் விற்பனை கூடம் மூலம் 250 டன், ராயக்கோட்டை விற்பனை கூடம் மூலம் 250 டன் என மாவட்டத்தில் மொத்தம் 1100 டன் துவரை கொள்முதல் செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது.

துவரை நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து, ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு காயவைத்து கொண்டவர விவசாயிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நன்கு காயவைத்து தரமுள்ள துவரை கிலோ ஒன்றிற்கு ₹58 வீதம் கொள்முதல் செய்யப்படும். துவரைக்கான கிரயம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த துவரை கொள்முதல் வருகிற ஏப்ரல் மாதம் 22ம் தேதி வரை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர் மற்றும் ராயக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்யலாம். பயறு வகை விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இத்திட்டத்தினை அனனத்து பயறு வகை விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.


Tags : Regular Outlets ,
× RELATED வரத்து அதிகரிப்பால் குண்டுமல்லி விலை சரிவு