×

வயல்வெளிக்குள் காட்டுப்பன்றி புகுவதை தடுக்கும் ‘நீல்போ’ சப்கலெக்டர் வழங்கினார்

பழநி, பிப். 18: பழநி பகுதியில் வயல்வெளிக்குள் காட்டுப்பன்றிகள் புகுவதை தடுப்பதற்காக விவசாயிகளுக்கு நீல்போ மருந்தை சப்கலெக்டர் உமா வழங்கினார். பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இப்பகுதிகளில் தற்போது நெற்பயிர் விவசாயம் அதிகளவு நடந்துள்ளது. இந்நிலையில் மலையோர கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட விலங்கினங்கள் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகின்றன. சோலார் மின்வேலி, அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் போதிய பலனில்லை. தற்போது நெற்பயிர்களின் அறுவடைக்கு 15 நாட்களே உள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் புலம்பி வந்தனர்.இதனைத்தொடர்ந்து நேற்று பழநி அருகே பாலசமுத்திரம், குள்ளப்பநாயக்கன் குளத்தின் மூலம் பாசனம் பெறும் விவசாயிகளுக்கு நீல்போ எனும் மருந்து வனத்துறையால் வழங்கப்பட்டது. பழநி சப்.கலெக்டர் உமா 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நீல்போ மருந்துகளை வழங்கினார். இதில் பழநி வனச்சரகர் (பொ) விஜயன், வனக்காப்பாளர்கள் புவனேஸ்வரன், சங்கர், ஆல்வின் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வனச்சரகர் விஜயன் கூறியதாவது, ‘500 மில்லி அளவுள்ள நீல்போ மருந்தை 2 லிட்டர் நீரில் கலந்து அதில் கயிறு, பழைய சேலை போன்ற பொருட்களை மூழ்க செய்து, அவற்றை வயலை சுற்றிலும் கட்டி விட வேண்டும். மருந்தின் வாசனை 25 நாட்கள் வரை இருக்கும். இந்த வாசனை காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற விலங்குகளுக்கு அறவே பிடிக்காது. இதனால் வயல்களுக்குள் நுழைய வாய்ப்பில்லை. நெல்லை மாவட்ட மலையடிவார விவசாயிகள் மூலம் சோதனை செய்யப்பட்டதில் இம்முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால் தற்போது பழநி விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : subcollector ,field ,
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...