×

போலி வங்கி கணக்கு தொடங்கி தொகுப்பு வீட்டுக்கான நிதி மோசடி

நாமக்கல், பிப்.18: போலி வங்கி கணக்கு தொடங்கி, தொகுப்பு வீட்டுக்கான நிதி மோசடி செய்ததாக குறைதீர் கூட்டத்தில் கூலித்தொழிலாளி புகார் மனு அளித்தார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், செல்லப்பம்பட்டி நடுப்பட்டி காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி கலெக்டர் மெகராஜிடம் அளித்த கோரிக்கை மனு விபரம்: கடந்த 4 ஆண்டுக்கு முன், தொகுப்பு வீடு திட்டத்தில், வீடு கட்ட புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். வீடு கட்டுவதற்கு அதிகாரிகள் எனக்கு வாய்மொழியாக அனுமதி அளித்தனர். சொந்த பணம் செலவு செய்து, அஸ்திவாரம் போட்டுவிட்டு, அரசின் உதவித்தொகை கேட்டபோது அதிகாரிகள் பெற்று தரவில்லை. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகிறேன். இதற்கான எனது ஊதியத்தை செல்லப்பம்பட்டியில், வங்கி மூலம் பெற்று வந்தேன். தற்போது, வங்கி கணக்கில் சம்பளம் வரவில்லை. புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று கேட்டபோது, அதிகாரிகள் எனது ஆதார் எண்ணை பயன்படுத்தி, நாமக்கல்லில் வேறு ஒரு வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் சம்பளம் போடுவதாக கூறினார்கள்.நாமக்கல்லில் உள்ள வங்கிக்கு சென்று விசாரித்தபோது, எனது வங்கி கணக்கிற்கு பலமுறை அரசு பணம் வந்து இருப்பதாகவும், நான் அந்த பணத்தை எடுத்துவிட்டதாகவும் கூறினார்கள். வங்கி பாஸ்புக்கை திரும்ப ஒப்படைத்து விட்டு, கணக்கை முடித்து கொள்ளலாம் என கூறினார்கள்.எனக்கு எழுத படிக்க தெரியாது. நான் கையெழுத்து போட்டு காசோலைகளை பயன்படுத்தி இருப்பதாக, வங்கி அதிகாரிகள் கூறுகிறார்கள். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி, சிலர் எனது பெயரில் போலியாக நாமக்கல் வங்கியில் கணக்கு தொடங்கி, எனது கையெழுத்தை போலியாக போட்டு, பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர். கட்டப்படாத வீட்டை கணக்கு காட்டி அரசு பணத்தை மோசடி செய்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி