×

பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

வேலூர், பிப்.17:பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் 9ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் இளம் விஞ்ஞானிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தாண்டு பயிற்சி வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களின் விவரங்களை அனுப்பி வைக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் நிகழ்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் என்னும் நிகழ்ச்சியினை வரும் மே 11ம்தேதி முதல் 22ம் தேதி வரை நடத்த உள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 3 மாணவர்களை இணைய வழியில் தெரிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களே இப்பயிற்சி திட்டத்தில் கலந்து கொள்ள தகுதியானவர்கள்.
எனவே அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி மாணவர்களை இணைய வழியில் விண்ணப்பிக்க, காலை இறை வணக்கத்தின் போது இப்பயிற்சி திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தமிழகத்தில் இருந்து அதிகளவிலான மாணவர்கள் பங்கு பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் 24ம் தேதி கடைசியாகும்.

Tags : Bengaluru Space Research Center ,schools ,
× RELATED விழிப்புணர்வு முகாம்