×

கோடைக்கு முன்பே வறண்ட கிணறுகள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிருக்கு ஊற்றும் விவசாயிகள்

தர்மபுரி, பிப்.13: தர்மபுரி அருகே கெங்கான்கொட்டாயில், கோடைக்கு முன்னரே வறட்சி நிலவுவதால், விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிரை காப்பாற்றும் அவலம் கடந்த 3 மாதமாக நிலவுகிறது.தர்மபுரி மாவட்டம், செட்டிக்கரை அருகே கெங்கான்கொட்டாய் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், சோளம், ஆரியம், பருத்தி, அவரை, வெண்டைக்காய் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, மாவட்டத்தில் பருவமழை போதிய அளவிற்கு பெய்தாலும், பெரும்பாலான ஏரிகள் நிரம்பவில்லை. தர்மபுரி அருகே உள்ள ரெட்டேரி, செட்டிக்கரை ஏரி, நீலாபுரம் ஏரி, வெள்ளோலை ஏரி, குரும்பட்டி ஏரி உள்ளிட்ட இந்த பகுதியை சுற்றியுள்ள ஏரிகளுக்கு சொட்டு தண்ணீர் கூட மழையால் கிடைக்கவில்லை. இதனால், கனமழை பெய்தும் கூட செட்டிக்கரை, சோலைக்கொட்டாய், குட்டூர், செம்மனஅள்ளி, மூக்கனூர் ஆகிய பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இங்குள்ள விவசாய கிணறுகளில், தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், இப்பகுதி விவசாயிகள் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி, பயிர்களுக்கு ஊற்றுகின்றனர்.

 இதுகுறித்து கெங்ககான்கொட்டாய் விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 2018ம் ஆண்டை போலவே 2019ம் ஆண்டிலும் செட்டிக்கரை, நாய்க்கனஅள்ளி, சோலைக்கொட்டாய், மூக்கனஅள்ளி, வெள்ளோலை, ஆண்டிஅள்ளி, அரியகுளம் ஆகிய 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் எந்த ஏரிக்கும் நீர்வரத்து சுத்தமாக இல்லை. பருவமழை பெய்த போது கிணற்றில் சிறிது தண்ணீர் இருந்தது. அதன்பின்னர் கடந்த டிசம்பர் மாதம் முதல், எங்கள் பகுதியில் கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டன. இதனால் நாய்க்கனஅள்ளி ஊராட்சியில், 1200 லிட்டர் தண்ணீர் ₹1000 முதல் ₹1500 வரை விலைக்கு வாங்கி  பயிர்களுக்கு பாய்ச்சி காப்பாற்றி வருகிறோம்,’ என்றனர்.

Tags : wells ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்