×

கனிமார்க்கெட்டில் ஒரு கடைக்கு மேல் வைத்திருந்தால் சீல் வைக்கப்படும்

ஈரோடு, பிப்.13:  ஈரோடு கனிமார்க்கெட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கடைகள் இருந்தால் சீல் வைக்கப்படும் என வியாபாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு கனிமார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய வணிக வளாகம் கட்ட பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிய வணிக வளாகம் கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டுமான பகுதியை தவிர பிற பகுதியில் தினசரி கடைகளுக்கு தகர செட் மூலம் அமைத்து தற்காலிக கடைகள் மாநகராட்சி சார்பில் கட்டி கொடுக்கப்பட்டது.

இதில், சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளை ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இதை உறுதி செய்த மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் மாநகர பொறியாளர் மதுரம் தலைமையில் ஆய்வு செய்து குடோனாக செயல்பட்ட சில கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து, கனிமார்கெட் வியாபாரிகள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் இளங்கோவனை சந்தித்து முறையிட்டனர். அப்போது, அவர்கள் கூறுகையில்,`ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் கடை பூட்டியிருந்தது என்ற ஒரே காரணத்துக்காக அவற்றை சீல் வைத்து விட்டனர். சிலர் வியாபாரம் இல்லாத காரணத்தால் கடையை பூட்டி வீட்டு சென்றனர். அவர்கள் அனைவரும் ஒரே ஒரு கடையை மட்டும் தான் ஒதுக்கீட்டில் பெற்றுள்ளனர்’ என்றனர். மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறுகையில்,`ஒரே ஒரு கடையை ஒதுக்கீடு பெற்றவர்களின் கடை சீல் வைக்கப் பட்டிருந்தால், அதிகாரிகள் ஆய்வு செய்த பின் திறக்கப்படும். அதே சமயம் ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளை யாராவது வைத்திருந்தால் சீல் வைக்கப்படும், என்றார்.

Tags : shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி