×

மிட்டாரெட்டிஅள்ளி வழியாக பொம்மிடிக்கு தார்சாலை அமைக்க வலியுறுத்தல்

தர்மபுரி, பிப்.12: தர்மபுரி அருகே, மிட்டாரெட்டிஅள்ளி வழியாக பொம்மிடிக்கு தார்சாலை அமைக்க வேண்டும் என்ற 45 ஆண்டு கால கோரிக்கையை, அரசு விரைந்து நிறைவேற்ற ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளிக்கும், பொம்மிடிக்கும் நடுவே உள்ள நூலஅள்ளி காப்புகாடு மலைப்பகுதி, பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனப்பகுதியாகும். பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த மக்கள் தர்மபுரிக்கு வருவதற்கு கடத்தூர், ஒடசல்பட்டி வழியாக சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். பொம்மிடியில் வாரந்தோறும் வியாழன்று சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் ஆடு, மாடுகள், மளிகை பொருட்கள் வாங்க, நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த முன்னோர்கள் கால்நடையாக மிட்டாரெட்டிஅள்ளி வழியாக நூலஅள்ளி காப்புக்காடு மலை வழியாக, ஒரு பாதை அமைத்து சென்று வந்துள்ளனர். இதே போல், நல்லம்பள்ளியில் நடக்கும் செவ்வாய் சந்தைக்கு, பொம்மிடி பகுதி மக்கள் இதே வழியாக நடந்தே வந்துள்ளனர். கடந்த 45ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மண்சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என நல்லம்பள்ளி மற்றும் பொம்மிடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து லளிகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரதாபன் கூறியதாவது:
மிட்டாரெட்டிஅள்ளியில் இருந்து கோம்பேரி ஏரி வரை தார்சாலை உள்ளது. அதன் பின்னர் மலைப்பாதையில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு, காளிகரம்பு வரை மண்பாதை உள்ளது. காளிகரம்பில் இருந்து பொம்மிடி ரயில்நிலையம் வரை மண்சாலை உள்ளது. பல ஆண்டுகளாக இந்த பாதையில் தார்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, வனத்துறை அனுமதி கிடைக்காததால் கனவாகவே உள்ளது. வெறும் 4 கிலோ மீட்டர் தூரம் மட்டும் தார்சாலை அமைத்தால், 40 கிலோ மீட்டர் தூர பயணம் மிச்சப்படும். சென்னைக்கு ரயிலில் செல்ல நல்லம்பள்ளி, மாதேமங்கலம், மிட்டரெட்டிஅள்ளி, மிட்டாதின்னஅள்ளி, நார்த்தம்பட்டி, லளிகம், பூதனஅள்ளி உள்ளிட்ட 15 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பொம்மிடிக்கு செல்ல வேண்டும். இதே போல் தர்மபுரி நகர் பகுதி மக்கள் 35 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து பொம்மிடிக்கு செல்ல வேண்டும். தர்மபுரி நகரில் இருந்து சென்னைக்கு செல்ல ரயில் மார்க்கம் இதுவரை கிடையாது. இந்த மலைப்பாதையில் தார்சாலை அமைத்தால், பொம்மிடி ரயில் நிலையத்திற்கு விரைவில் செல்ல முடியும். அங்கிருந்து சென்னை உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும், சேலம் வழியாக தென்மாவட்டங்களுக்கும் அனைத்து ரயில்களிலும் செல்ல வசதி ஏற்படும். மத்திய அரசு இதற்கான அனுமதியை வழங்கினால், இந்த பகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : school ,Mittarettalli ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா