×

முறைபடுத்த கோரிக்கை விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்தபோது அறிவிப்பை வெளிப்படுத்தாமல் 3 ஆண்டுகளுக்கு பிறகு நோட்டீஸ்

தோகைமலை, பிப்.12: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூரில் ஐஓபி வங்கி வாடிக்கையாளர்களின் அமைதி பேச்சுவார்த்தை கரூர் முதன்மை கிளையின் இளநிலை மேலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. ஐஓபி வங்கி மண்டல பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாநில விவசாயி அணி தலைவர் புலியூர் நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் விமலாவேலாயுதம், வங்கியின் மூத்த வாடிக்கையாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட தொடக்கத்தில் வங்கியின் வாடிக்கையாளர்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. அப்போது வங்கியில் கடன் பெற்று அதைதிரும்ப செலுத்திய பிறகும் தாங்களுக்கு காசோலை வழங்க மேலாளர் மறுப்பதோடு தரக்குறைவாக பேசுகிறார். கடன் கட்டிய விவசாயிகளுக்கு மீண்டும் கடன் தர மறுக்கிறார். 100 நாள் பணியாளர்கள் வங்கிக்கு வந்தால் அலட்சியப்படுத்துகின்றனர்.

வங்கியில் கடன் பெற்று அந்த கடன் வராக்கடனாக (என்பிஏ) சென்று மீண்டும் கடனை முழுமையாக செலுத்திய பிறகு கடன் தருவதில்லை. அதிக தொகையாக சுமார் 1 லட்சத்திற்கு மேல் வங்கியில் தங்களது சேமிப்பு கணக்கில் பணம் எடுக்க வந்தால் முதலில் ஒப்புதலுடன் டோக்கன் அளித்து பணம் எடுப்பதற்கு மாலை வரவேண்டும் என்று தெரிவிக்கின்றனர். மாலையில் வந்தால் மேலாளர் தரக்குறைவாக பேசுகிறார். வங்கியில் கடன் இருப்பதற்காக தமிழக அரசு வழங்கும் (ஈமச்சடங்கு) இறுதி அஞ்சலி செலவிற்கு அளிக்கும் பணத்தை மேலாளர் பிடித்து வைத்து உள்ளார். முறையான ஆவணங்கள் அளித்து வங்கியின் உயர் அதிகாரிகள் ஒப்புதல் பெற்ற பிறகும், விவசாயி வீட்டு பிள்ளைகள் கல்வி கடன் எப்படி செலுத்துவீர்கள் என்று காரணம் காட்டி மருத்துவ படிப்பிற்கான கல்வி கடன் வழங்காமல் வங்கி மேலாளர் அலக்கழித்து வருகிறார்.

கடன் செலுத்தி அதற்கான நீதிமன்ற தீர்ப்பை காண்பித்தும் ஆவணங்கள் தராமல் அலட்சியம் காட்டுகின்றனர். மகளிர் குழுவில் கடன் பெற்றவர்களில் ஒருசிலர் சரியாக கடனை திரும்ப செலுத்தாத நிலையில் மற்ற உறுப்பினர்களுக்கும் சேமிப்பு கணக்கை முடக்குகின்றனர். சிசி கணக்கு இருந்தபோதும் அதில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை தர வங்கி மேலாளர் அலக்கழிப்பு செய்வதோடு தரக்குறைவான வார்த்தைகளால் பேசுகிறார். விவசாயிகளுக்கான கடன்களை அரசு தள்ளுபடி செய்தபோது அதற்கான அறிவிப்புகளை வெளிப்படையாக ஒட்டாமல் ரகசியமாக வைத்திருந்து பின்னர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கடன் செலுத்த நோட்டீஸ் அனுப்புகின்றனர். நகை அடமானம் வைத்த பிறகு அதற்கான கடன்களை முறையாக செலுத்தாத நிலையில் ஏலத்திற்கு நோட்டீஸ் அனுப்பி ஏலம் விடுகின்றனர்.

ஆனால் முறையாக ஏலம் விடாமல் நல்ல நகைகளை ரகசியமாக வேண்டியவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து புகார் அளித்தால் யாரும் எந்த பதிலும் தருவதில்லை. இதனால் கடந்த 3ம் தேதி அன்று வங்கி முன்பாக ஆர்பாட்டம் செய்ய முடிவு எடுத்தபிறகு தற்போது பேச்சுவார்த்தைக்கு வந்து உள்ளீர்கள். ஆகவே உடனடியாக வங்கி மேலாளர் முகேஷ்ரஞ்சன் மற்றும் நகை மதிப்பீட்டாளர் செண்பகம் ஆகியோரை பணிமாற்றம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேசினர். இதற்கு பதில் அளித்து பேசுகையில் தங்களது புகார்களை மனுவாக அளிக்கவேண்டும். மனுக்கள் மீது ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சிபில் ரத்து குறித்து வங்கி முடிவு எடுக்க முடியாது ஆகவே உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறோம் என்று தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடாசலம், தளிஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்கள் காந்தி, சுந்தரம், குளித்தலை எஸ்ஐ முத்துச்சாமி உள்பட வாடிக்கையாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : disclosure ,government ,
× RELATED ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு துவக்கம்