×

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறையில் அடாவடி வசூல்

காஞ்சிபுரம், பிப்.11:மாவட்டத்தின் தலைநகர் மட்டுமின்றி, உலகப் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர், வரதராஜபெருமாள், கைலாசநாதர் உள்பட ஏராளமான கோயில்கள் நிறைந்துள்ள காஞ்சிபுரம், சுற்றுலா நகராகவும் உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். பாரம்பரிய பட்டு புடவைகளுக்கு பிரசித்திபெற்ற காஞ்சிபுரத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், ஆந்திரா, கேரளா உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் தினமும் வந்துசெல்கின்றனர். இதனால், எப்போதும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும். நகராட்சி சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பஸ் நிலையத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் கட்டண கழிப்பறை குத்தகைக்கு எடுக்க ஏலம் விடப்படுகிறது. இதனால், பஸ் நிலைய கட்டண கழிப்பிடம் ஏலத்தின் போது ஒவ்வொரு முறையும் கடும் போட்டி நிலவி வருகிறது.
மேலும் குத்தகை எடுக்கும் குத்தகைதாரர்கள் சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க உரிய கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்கவேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறையில் இதுகுறித்த எந்த விவரமும் ஒட்டவில்லை. இதனால் இந்த கழிப்பறையில் சிறுநீர் கழிக்கச் சென்றாலும் ₹10 கட்டமாக வசூல் செய்யப்படுகிறது. அடாவடியாக கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து பொதுமக்கள், பயணிகள் கேட்டாலும், கட்டணம் வசூலிப்பவரின் பேச்சுக்கும், ஏச்சுக்கும் ஆளாக நேரிடுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதுடன் கழிப்பறைகளை முறையாக பராமரிப்பதோ, சுத்தம் செய்வதோ இல்லை. அடுமட்டுமின்றி கழிப்பறையில் உள்ள கதவுகள் உடைந்துள்ளன. ஆனால், கட்டணத்தை மட்டும் கராறாக வசூலிக்கின்றனர்.

அவசரத்துக்கு என்ன செய்வதென, வேறுவழியின்றி, கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல நேரிடும் நிலையில் உள்ளனர். ஆனால், உள்ளே வீசும் பயங்கர துர்நாற்றம் குடலை பிடுங்கும் அளவில் இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, காஞ்சிபுரம் பஸ் நிலைய கட்டண கழிப்பிடத்தை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, கட்டணம் வசூலிப்பு, பராமரிப்பு பணிகள் முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kanchipuram Bus Station ,
× RELATED காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில்...