×

திருப்போரூர் – மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் – மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் 15 கிமீ தூரம் உள்ளது. தண்டலம், ஆலத்தூர், வெங்களேரி, கருங்குழிப்பள்ளம், பண்டிதர்மேடு, பையனூர், பவழக்காரன்சாவடி, பூஞ்சேரி ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர், திருப்போரூர் வழியாக சென்னை, தாம்பரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.

திருப்போரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, நெம்மேலி அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றுக்கும் கேளம்பாக்கம், படூர், நாவலூர், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இச்சாலை வழியாக பயணிக்கின்றனர். ஆனால், திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் வரை போதிய மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக காலையில் பள்ளி துவங்கும்போதும், மாலையில் பள்ளி முடிந்த பிறகும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து திருப்போரூர் வரை பயணித்து வந்து விடுகிற பொதுமக்களும் மாமல்லபுரம் வரை செல்வதற்கு 1 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். இதன் காரணமாக மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதை, பயன்படுத்தி சமூக விரோதிகள் பள்ளி, கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்தல், தண்ணீர் பீய்ச்சி அடித்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். ஆகவே, மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் காலை மற்றும் மாலை வேளைகளில் திருப்போரூர் மற்றும் மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

The post திருப்போரூர் – மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Mamallapuram ,Tirupporur ,Thandalam ,Alathur ,Venmageri ,Karunkuzhipallam ,Panditharmedu ,Bhayanur ,Bhagavaranchavadi ,Pooncheri… ,Tirupporur – ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு...