×

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பிளாஸ்டிக் துகளாக்கும் இயந்திரத்தை சீரமைக்க கோரிக்கை

 

காஞ்சிபுரம், ஜூலை 10: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பழுதாகி உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை துகளாக்கும் இயந்திரத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூ..3 லட்சம் மதிப்பிலான ஐராவத், பிளாஸ்டிக் பாட்டில்களை துகளாக்கும் இயந்திரத்தை அப்போதைய மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கிவைத்தார். காஞ்சிபுரம் பெருநகராட்சி மற்றும் செயிண்ட் கோபெய்ன் நிறுவனம் இணைந்து பொதுமக்களால் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக மறுசுழற்சி இயந்திரம் நிறுவப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பிளாஸ்டிக் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்களிப்பை தருவதுடன், நமது சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கிறது. இந்த குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் நிலத்தில் விழுந்து மக்கிப்போவதற்கு குறைந்தது 450 வருடங்கள் ஆகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் பொருட்டு செயிண்ட் கோபெய்ன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியின் கீழ் ரூ..3 லட்சம் மதிப்புள்ள ஐராவத் பிளாஸ்டிக் பாட்டில்களை துகள்களாக்கி மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை, தொண்டு நிறுவனம் மூலம் நிறுவி பிளாஸ்டிக் இல்லா நகரை உருவாக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.

இந்த இயந்திரம் ஒரு நாளைக்கு 4000 பிளாஸ்டிக் பாட்டில்களை துகள்களாக்கும் திறன்கொண்டது. இந்த இயந்திரத்தின் மூலம் 15 கிலோ வரை பிளாஸ்டிக் துகள்கள் சேமிக்கப்படும். பின்னர் இப்பிளாஸ்டிக் துகள்கள் பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மறுசுழற்சிக்கு திருப்பி அனுப்பப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இயந்திரம் அமைக்கப்பட்ட சில மாதங்களில் பழுதாகி மீண்டும் சரிசெய்யப்படாமல் உள்ளது. எனவே கோயில்களின் நகரம் காஞ்சிபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தும் விதமாக இந்த இயந்திரத்தை பழுதுநீக்கி மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பிளாஸ்டிக் துகளாக்கும் இயந்திரத்தை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram bus station ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...