×

என்இசிசி அலுவலகத்தை பூட்டிய கோழிப்பண்ணையாளர்கள் 12 பேர் மீது வழக்குப்பதிவு

நாமக்கல், பிப்.11: என்இசிசி அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டிய 12 கோழிப்பண்ணையார்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு பிறகு வீடியோ ஆதாரத்துடன் என்இசிசி  புகார் அளித்துள்ளது. நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைக்கு என்இசிசி என்ற அமைப்பு விலை நிர்ணயம் செய்து வருகிறது. என்இசிசி மண்டல அலுவலகம் நாமக்கல் -பரமத்தி ரோட்டில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கடந்த 6ம் தேதி இந்த அலுவலகத்துக்கு வந்த கோழிப்பண்ணையாளர்கள் சிலர், முட்டைக்கு சரியாக விலை நிர்ணயம் செய்வதில்லை எனக்கூறி அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணியத்திடம் தகராறு செய்தனர். பின்னர், அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டினார்கள். அலுவலகத்தின் மீது முட்டையை உடைத்து வீசினார்கள்.

இதையடுத்து, கடந்த 5 நாட்களாக என்இசிசி அலுவலகம் திறக்கப்படவில்லை. இதுகுறித்து என்இசிசி மண்டல என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவு கோழிப்பண்ணையாளர்கள் சிலர் நேற்று மாவட்ட எஸ்பி அருளரசுவை சந்தித்து புகார் அளித்தனர். எஸ்பியின் உத்தரவுப்படி நேற்றிரவு நாமக்கல் காவல்நிலையத்தில் என்இசிசி மண்டல மேலாளர் பாலசுப்பிரமணி, புகார் அளித்தார். புகாருடன் கடந்த 6ம் தேதி என்இசிசி அலுவலகத்தில் நடைபெற்ற தகராறு காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவும் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், என்இசிசி மண்டல குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் 12 பேர் கடந்த 6ம் தேதி அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து முட்டைகளை உடைத்து வீசினார்கள். இதை தடுத்த என்னை தகாத வார்தையால் திட்டி தாக்கினார்கள். கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்கள் என கூறியுள்ளார்.  இந்த புகாரின் அடிப்படையில் நாகராஜன் உள்பட 12 பேர் மீதும் கொலை மிரட்டல்,  அத்துமீறி அலுவலகத்தை பூட்டி தகராறு செய்தல், தகாத வார்த்தையால் திட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் எஸ்ஐ பூபதி வழக்குப்பதிவு செய்துள்ளார். சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு பிறகு, என்இசிசி நிர்வாகிகள், கோழிப்பண்ணையாளர்கள் மீது புகார் அளித்துள்ளதும், அவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் திடீரென வழக்கு பதிவு செய்துள்ளதும் பண்ணையாளர்கள் மத்தியில் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Poultry farmers ,office ,NECC ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...