×

சென்னை தலைமை செயலகத்தில் 7ம் நம்பர் கேட் திடீர் மூடல் மாற்றுத்திறனாளிகள் அவதி : அதிமுகவினர் அத்துமீறலே காரணம் என குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அங்கு அமைச்சர்கள், அதிகாரிகளை பார்க்க தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். தலைமை செயலகத்திற்குள் செல்ல 10 வழிகள் உள்ளது. முதல்வர் 1ம் நம்பர் கேட் வழியாக செல்வார். அமைச்சர்கள் 4, 6, 10ம் நம்பர் கேட் வழியாக செல்வார்கள். அரசு அதிகாரிகள், பார்வையாளர்கள் 4, 6, 7, 8ம் நம்பர் கேட் வழியாக செல்வார்கள். மாற்றுத்திறனாளிகள் 7ம் நம்பர் கேட் வழியாக செல்வது வழக்கம். காரணம், 7ம் நம்பர் கேட் வழியாக மாற்றுத்திறனாளிகள் தலைமை செயலக அலுவலகம் வரை தங்களது ஸ்கூட்டரில் செல்ல முடியும். அதேபோன்று இந்த வழியாகத்தான் பேட்டரி கார் மூலம் செல்ல வசதி உள்ளது. அரசு ஊழியர்கள் தேநீர் மற்றும் மதிய இடைவேளைக்கு இந்த பாதையை அதிகளவில் பயன்படுத்துவார்கள்.

இந்நிலையில், நேற்று மதியம் முதல் 7ம் நம்பர் கேட்டை போலீசார் திடீரென பூட்டு போட்டு பூட்டி விட்டனர். இதனால் அரசு ஊழியர்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் தங்கள் மொபட்டில் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து தலைமை செயலக காவலரிடம் கேட்டபோது, “அமைச்சர்களை பார்க்க அதிகளவில் அதிமுகவினர் தலைமை செயலகம் வருகிறார்கள். இவர்கள் முறையாக அனுமதி சீட்டு வாங்குவதில்லை. அதேபோல நேற்று அனுமதி சீட்டு இல்லாமல் அதிமுக பிரமுகர்கள் சிலரை போலீசார் 7ம் நம்பர் கேட்டில் நிற்கும் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதிமுகவினர் காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, சண்டை போட்டுள்ளனர். பலமுறை சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் தலைமை செயலக உயர் அதிகாரிகளின் உத்தரவு படியே 7ம் நம்பர் கேட்டை பூட்டு போட்டு பூட்டிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.

Tags : closure ,headquarters ,Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...