×

பொதுமக்கள் அவதி உடையாளூரில் மாமன்னன் ராஜராஜசோழனுக்கு கோயில் கட்ட வேண்டும்

தஞ்சை, பிப்.7: மாமன்னன் ராஜராஜசோழனுக்கு உடையாளூரில் கோயில் கட்ட காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் தலைமையிலான விவசாயிகள் பெரியகோயில் குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்திய மாவட்ட கலெக்டருக்கு தென்னங்கன்றுகளை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தமிழக முதல்வருக்கு மாவட்ட கலெக்டர் வழியாக அளித்த மனுவில், தஞ்சை தரணியை ஆண்ட பெருமன்னன் ராஜராஜசோழன் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகில் உள்ள பழையாறை என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்துள்ளார். பழையாறையுடன் இணைந்த சிற்றூர் உடையாளூரில் தான் ராஜராஜசோழன் காலத்தில் கோட்டைத்தோப்பு என அழைக்கப்பட்டு அப்பெருமன்னனின் பள்ளிப்படைகோயில் அமைக்கப்பட்டிருந்தது.

உடையாளூர் கைலாசநாதர் மற்றும் லட்சுமி நாராயணபெருமாள் கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் முதலாம் ராஜேந்திரன் காலத்து கல்வெட்டுக்கள் என வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். கைலாசநாதர் கோயிலில் ராஜராஜசோழனுக்கு கருங்கல் சிற்பம் உள்ளது. உடையாளூரில் தான் ராஜராஜசோழனின் தமக்கையார் மங்கையர்கரசியும் இருந்து மறைந்திருக்கிறார். ராஜராஜசோழனின் சமாதியும் உடையாளூரில் தான் இருந்திருக்கிறது.
அதன்பின்னர் அவற்றை யாரும் சரிவர பராமரிக்கப்படாததால் அவை சிதிலமடைந்துவிட்டன. பெருமன்னனின் சமாதி இருந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்தால் மேலும் பல வரலாற்று தகவல்கள், நிகழ்வுகள் நிச்சயம் தெரியவரும்.

உலகமே வியக்கும் உன்னதகோயிலை கட்டிய பெருமன்னனுக்கு உடையாளூரில் கோயில் கட்டி வழிபடுதலே நாம் அம்மன்னனுக்கு செய்யும் நன்றி கடனாகும். வருங்கால தலைமுறைகளுக்கு நாம் தரும் வரலாற்று பதிவுகள் ஆகும். எனவே இக்கோரிக்கையை பெருமன்னனின் சதய விழாவின்போதே நிறைவேற்றிட வேண்டும் என்பது பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்பார்ப்பு ஆகும். இதுகுறித்து தமிழக அரசு முடிவெடுத்து நடைபெற உள்ள தமிழக நிதிநிலைக் கூட்டத்தில் ராஜராஜசோழனுக்கு கோயில் கட்ட நிதி ஒதுக்கி அறிவிப்பு செய்து, மாவட்ட கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் பணிகளை விரைவாக துவங்கி நிறைவேற்றிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Mamannan Rajarajasozan ,
× RELATED தஞ்சாவூர் மேம்பாலத்தில் அடுத்தடுத்து...