×

ஓய்வு அறையாக மாறிய போலீஸ் பூத் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவல பாதையை தார் சாலையாக மாற்ற வேண்டும்

பாடாலூர், பிப்.7: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையை சுற்றி வரும் கிரிவல பாதையை தார் சாலையாக அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வடபழனி என்று அழைக்கப்படும்மிகவும் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.பங்குனி உத்திர திருவிழா காலங்களில் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். திருவிழா அன்று செட்டிகுளம் சிறு வயலூர், குரூர், பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், மாவிலங்கை, பெரகம்பி, நாட்டார்மங்கலம், கூத்தனூர், சீதேவி மங்களம், பாடாலூர், இரூர், திருவிளக்குறிச்சி, காரை, தெரணி, ஆலத்தூர் கேட், மருதடி, நாரணமங்கலம், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் அன்னதானம் வழங்கியும் தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுவார்கள். அதேபோல் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த கம்பு சோளம், மிளகாய், வெங்காயம், நெல் உள்ளிட்ட தானியங்களையும் எடுத்து வந்து சுவாமிக்கு வழங்கியும், ஆடு மாடுகளை கோயிலுக்கு வழங்கியும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுவார்கள்.

திருவிழாவின்போது கோயில் தேரோட்டம் இந்த மலையை சுற்றி வரும். திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதேபோல் ஆண்டுதோறும் சித்திரை ஒன்றாம் தேதி படி பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாள்தோறும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் திரளான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுகின்றனர். இதுபோல் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் மற்றும் பவுர்ணமி கிரிவலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் மலையை சுற்றி வரும் சாலை மிகவும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக நடக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது.அதனால் இந்த மலையை சுற்றி வரும் சாலையை தார் சாலையாக மேம்பாடு செய்ய அறநிலையத்துறை நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : resting-place ,tar road ,Dandayudapani Swamy Temple ,
× RELATED தோகைமலை அருகே தார் சாலையை...