×

தோகைமலை அருகே தார் சாலையை சேதப்படுத்தி காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிப்பு

* மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

தோகைமலை : தோகைமலை அருகே தார் சாலையை சேதப்படுத்தி காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இதை மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.தோகைமலை அருகே நெய்தலூர் காலனி வழியாக செல்லும் பெட்டவாய்த்தலை, நங்கவரம் காவல்காரன்பட்டி சாலையில் புதுக்கோட்டை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குழாய்கள் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் செல்கிறது.

கடந்த 1997ம் ஆண்டு ஜீயபுரத்தில் இருந்து குளத்தூர் வழியாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டதாக தெரிகிறது. நெய்தலூர் காலனி வழியாக செல்லும் பெட்டவாய்த்தலை, நங்கவரம், காவல்காரன்பட்டி சாலையின் கீழ் புறத்தில் அமைக்கப்பட்டது.இதில் நெய்தலூர் காலனியில் உள்ள கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் நெடுஞ்சாலைக்கு சொந்தமான தார் சாலையில் அமைக்கப்பட்டு உள்ளதால் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் பழுது ஏற்படும் போது தார்சாலை சேதமாகி வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை காவிரி கூட்டுக்குடி நீர் திட்ட குழாய்கள் பதித்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் குழாய்கள் சேதமாகி ஆங்காங்கே குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் புதுக்கோட்டை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குழாய்களை மாற்றி அமைக்க முடிவு செய்து உள்ளனர். பெட்டவாய்த்தலை, நங்கவரம் காவல்காரன்பட்டி சாலையின் மேற்கு பகுதியில் அமைக்க நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற்றனர். இதில் நெய்தலூர் காலனியில் நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கிய இடத்திற்கு மாறாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தார்சாலையை சேதப்படுத்தி குழாய்களை பதித்து வருகின்றனர்.

மேலும் நெய்தலூர் காலனி கடைவீதியில் உள்ள பெட்டவாய்த்தலை, நங்கவரம் காவல்காரன்பட்டி சாலையில் சுமார் 20 அடி முதல் 30 அடி வரை ஆக்கிரமிப்புகள் செய்து கட்டிடங்களை அமைத்து உள்ளனர். இதனால் போதிய இடங்கள் இருந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தார்சாலையை சேதப்படுத்தி குழாய்களை பதித்து வருவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை குளித்தலை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார் மற்றும் இளநிலை பொறியாளர் சந்திரமோகன் அகியோர் சம்பவ இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள தார் சாலையை சேதப்படுத்தி குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து உள்ளனர். இதனால் தார்சாலைக்கு உரிய இழப்பீடு வழங்கி குழாய் பதிக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று ஒப்பந்த பணியாளர்களிடம் தெரிவித்து உள்ளனர்.

இதை கண்டுகொள்ளாத ஒப்பந்த பணியாளர்கள் தொடந்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தார்சாலையை சேதப்படுத்தி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை பதித்து வருகின்றனர். இதனால் தோகைமலை அருகே நெய்தலூர் காலனியில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து தார்சாலையை சேதப்படுத்தி சாலையின் ஒட்டிய பகுதியில் அமைக்ப்பட்டு உள்ள குழாய்களை அகற்ற வேண்டும்.

இதேபோல் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை குளித்தலை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார் கூறுகையில், பொதுமக்களின் தகவலின்படி நெய்தலூர் காலனி கடைவீதியில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி அளிக்கப்பட்டதற்கு மாறாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தார்சாலையை சேதப்படுத்தி குழாய்களை பதித்து வருகின்றனர். இதனால் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பணிகளை நிறுத்திவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.இதுகுறித்து இளநிலை பொறியாளர் சந்திரமோகன் கூறும்போது, நெடுஞ்சாலைக்கு சொந்தமான தார்சாலையை சேதப்படுத்தி அமைக்கப்பட்டு உள்ள குழாய்களை அகற்றப்படும். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

The post தோகைமலை அருகே தார் சாலையை சேதப்படுத்தி காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tar Road ,Dohaimalai ,DOKAIMALAI ,KAVIRI ,THAR ,DOKAIMALA ,Dar Road ,Dinakaran ,
× RELATED தோகைமலை அருகே அனுமதி இல்லாமல் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்