×

புதுச்சேரி நகரப்பகுதி கிரைம் சிட்டியாக மாற்றப்பட்டுள்ளது

புதுச்சேரி, பிப். 7: புதுச்சேரி மாநில அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்எல்ஏ அளித்த பேட்டி: முதல்வர் நாராயணசாமி மக்களுடைய நலனுக்காக சட்டமன்ற கூட்டத்தை பயன்படுத்தாமல், தனது அரசியல் சார்ந்த சொந்த விருப்பு, வெறுப்புக்காக சட்டமன்றத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். ஆட்சி அமைந்த 4 ஆண்டு காலம் முழுமையான பட்ஜெட்டை ஒரு முறை கூட சமர்ப்பிக்காத முதல்வர், தனது எதிர்ப்பு அரசியலை பயன்படுத்திக் கொள்ள சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுவது என்பது தவறான ஒன்றாகும். மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு மத்திய அரசின் நிதியாக ரூ.1,703 கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  மாநிலத்துக்கான மொத்த வருவாயையும் இணைந்து 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை அரசு சமர்ப்பிக்க முன்வர வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தன்னுடைய உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்று அமைச்சர் கந்தசாமி கூறுகிறார். இதனை காவல்துறை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். மக்கள் தினந்தோறும் பயம் கலந்த பீதியோடு வாழக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புதுச்சேரி நகரப்பகுதி என்பது கிரைம் சிட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

அதனை தடுப்பதற்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்று தெரியவில்லை. தற்போது முதல்வரும், கவர்னரும் தனியாக காவல்துறை கூட்டத்தை கூட்டி சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரிவிப்பார்கள். இப்பிரச்னையில் காவல்துறை சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. ஆனால், அரசு தனது கடமையிலிருந்து தவறிவிட்டது. எனவே, காவல்துறை நடவடிக்கை எடுத்து சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென டிஜிபிக்கு அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Puducherry ,suburb ,Crime City ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு