×

புதுச்சேரி சட்டசபைக்கு அதிகாரமில்லை

புதுச்சேரி, பிப். 7:  மத்திய  அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்  நிறைவேற்றக்கூடாது என சட்டசபை செயலரிடம் பாஜக எம்எல்ஏக்கள் மனு கொடுத்தனர். புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 12ம் தேதி காலை கூடுகிறது. இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை  திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு  தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் சாமிநாதன்,  செல்வகணபதி ஆகியோர் சட்டசபையில் செயலர் வின்சென்ட்ராயரை  நேற்று நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் ‘புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 1963 பிரிவு 18ன் படி மாநில மற்றும் பொதுப்பட்டியலில் இருக்கும் விவகாரங்கள் தொடர்பாக சட்டம் இயற்ற முடியும்.  குடியுரிமை திருத்த சட்டம் மத்திய பட்டியலில் உள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சட்டசபை விவாதிக்க அதிகாரமில்லை. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் வரும் யூனியன் பிரதேசம் இது தொடர்பாக கேள்வி எழுப்ப முடியாது. இது  தொடர்பான விவாதங்களும் சட்டத்தை மீறிய செயலாகும். எனவே இந்த தீர்மானத்தை அனுமதிக்க கூடாது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சாமிநாதன் எம்எல்ஏ கூறுகையில்,  நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் வாக்கெடுப்பு மூலம் குடியுரிமை திருத்த சட்டம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் 75 சதவீத மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஜனாதிபதி ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இதனை எதிர்த்து புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்போவதாக  முதல்வர் கூறியிருக்கிறார். அவர் மக்கள் பிரச்னைகளை மறைக்கவும், அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வருகிறார்.

6 மாதகாலமாக அரிசிக்கான பணம் கொடுக்கவில்லை, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை, ஆலையை மூடிவிட்டனர் எவ்வளவோ பிரச்னைகள் மாநிலத்தில் இருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் விவாதிக்க சிறப்பு சட்டமன்றம் கூட்டவில்லை. எனவே பாஜக கடுமையாக இதனை எதிர்க்கும். மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம் என்றார்.

Tags : Puducherry Assembly ,
× RELATED முதல்வரின் தனிச்செயலருக்கு ‘டோஸ்’