×

குரூப்-1 தேர்வு எழுதியவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் புகார்

தர்மபுரி, பிப்.6: குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த விவகாரத்தில், தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் நேற்று மேலும் ஒருவர் புகார் செய்துள்ளார். தர்மபுரி மாவட்டம், பச்சினம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ் என்பவரின் மகன் ராஜகோபால் மாற்றுத்திறனாளி, எம்ஏஎம்எட் பட்டதாரி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குரூப்-1 தேர்வு சென்னையில் எழுதினார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மல்லப்பாடியை சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது உறவினர் முருகன், அவரது மனைவி ஷீலா மற்றும் அவரது தம்பி திருமலை ஆகிய 4 பேரும், ராஜகோபாலுக்கு மாற்றுத்திறனாளி கோட்டாவில், அரசு வேலை வாங்கி தருவதாக ₹3 லட்சம் பெற்றுள்ளனர். இதே போல் அந்த பகுதியில் ஏராளமானவர்களிடம் தலா ₹3 முதல் ₹4.5 லட்சம் வரை சுமார் ₹85 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர்.

ஆனால், கோவிந்தராஜ் தரப்பினர், அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தியதோடு, பணம் கேட்டு சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டினர். நேற்று முன்தினம், கோவிந்தராஜ், திருமலை, ஷீலா ஆகியோர் கடத்தூரில் உள்ள சிலரிடம் வேலை வாங்கி தருவதாக பேசிக் கொண்டிருந்தனர். இதையறிந்த தேவராஜ், அங்கு சென்று கோவிந்தராஜிடம் பணத்தை கேட்டுள்ளார். ஆனால், கோவிந்தராஜ் தரமறுத்ததோடு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து தேவராஜ் மற்றும் கோவிந்தராஜிடம் பணம் கொடுத்து ஏமாந்த 12 பேர், தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து டவுன் போலீசார், ஷீலா மற்றும் அவரது தம்பி திருமலை ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் கோவிந்தராஜ் மற்றும் ஷீலாவின் கணவர் முருகன் அரசு டிரைவர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, தர்மபுரி நியூ காலனியை சேர்ந்த கருவூரான் என்பவர், தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில், ‘எனது பட்டதாரி மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதால், கோவிந்தராஜிடம் கடந்த 2015ம் ஆண்டு ₹4.65 லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால், கோவிந்தராஜ் வேலை வாங்கி தராமல் காலதாமதம் செய்ததால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். இதையடுத்து, ₹1லட்சத்தை கொடுத்த கோவிந்தராஜ், மீதமுள்ள ₹3.65 லட்சத்தை தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்,’ என கருவூரான் தெரிவித்துள்ளார்.

Tags : government ,authors ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...