×

விருத்தாசலம் அருகே சின்னப்பண்டாரங்குப்பத்தில் மாடு கடன் வழங்கும் திட்டத்தில் மோசடி

விருத்தாசலம், பிப். 6: விருத்தாசலம் அருகே சின்னப்பண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாடு கடன் வழங்கியதில் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருத்தாசலம் அருகே சின்னப்பண்டாரங்குப்பத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு சின்ன பண்டாரங்குப்பம், செம்பளக்குறிச்சி, பெரியவடவாடி, விஜயமாநகரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மானிய விலையில் உரம், யூரியா, பூச்சி மருந்து மற்றும் இடுபொருட்கள், பயிர்கடன் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் கடந்த 2019-20ம் ஆண்டிற்கான கறவை மாடுகள் கடன் வழங்கும் திட்டத்தில் 49 விவசாயிகளுக்கு கறவை மாடு வழங்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு பயனாளிக்கும் 2 மாடுகள் வீதம் 90 ஆயிரம் ரூபாய்க்கான கடன் வழங்கப்பட்டது. அதில் முதல் தவணைக்காக மாடு வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் தவணைக்கு மாடு வழங்காமல்  காப்பீட்டுத் தொகைக்கென ஒவ்வொரு மாட்டிற்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு மாட்டிற்கு 20 ஆயிரம் ரூபாய் என பிடித்துக்கொண்டு மீதமுள்ள 70 ஆயிரத்தில் 50 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதில் சித்தேரிகுப்பத்தை சேர்ந்த சதானந்தம் மகன் கிருஷ்ணமூர்த்தி என்ற பயனாளி மாடு வாங்கி வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாடு மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வந்த நிலையில் மயங்கி விழுந்து இறந்தது.
இதுகுறித்து கடன் சங்க தலைவர் மற்றும் செயலாளரிடம் கிருஷ்ணமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் மாட்டை பார்க்க முடியாது என கூறி கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவியுங்கள் என்று கூறிவிட்டனர். கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தும் அவரும் வரவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கடன் சங்கத்தில் இருந்து பெறப்பட்ட மாடுகளுக்கு காதில் டோக்கன் போட்டு மாடு வழங்கப்படும் ஆனால் இந்த மாட்டுக்கு எதுவுமில்லை.  இந்த மாடு  கடன் சங்கத்தில் பெற்றது கிடையாது என உறுதியாக தெரிவித்து மருத்துவர் வர மறுத்துவிட்டார்.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, கடந்த வருடம் மாடு வழங்கும் திட்டத்திற்கு எங்களுக்கு மாடு வழங்கினர். அப்போது மாடுகளுக்கு காப்பீடு செய்வது குறித்து எந்தத் தகவலும் கூறவில்லை. சில விண்ணப்பங்களில் மட்டும் கையெழுத்து பெற்றனர். பல மாடுகள் இறந்த நிலையில் காப்பீடு தொகை குறித்து அவர்களிடம் கேட்டபோது பொறுப்பான பதில் ஏதும் கூறவில்லை. ஆனால் மாட்டுக்கு காப்பீட்டுத் தொகையை அரசு வழங்குவது குறித்து எந்தவித தகவலும் எங்களுக்கு கூறவில்லை. மேலும் மாடு வழங்கிய நிலையில் அதற்கான விழிப்புணர்வு மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதனை தீர்க்கும் முறைகள் மற்றும் மாடு வளர்ப்பதற்கான ஆலோசனைகள் கால்நடைத்துறை மூலம் எங்களுக்கு வழங்கவில்லை. இதனால் தற்போது மாட்டுக்காக பணத்தையும் கொடுத்து மாட்டையும் இழந்து நிற்கதியாய் நிற்கிறேன் என வேதனையுடன் தெரிவித்தார்.

சின்னப்பண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இதுபோன்று மாடு வழங்குவது, உரம், யூரியா மற்றும் இடுபொருட்கள் வழங்குவது விவசாயிகளுக்கு கடன் தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்து அரசு திட்டங்களிலும் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...