×

மாநகரில் இருந்து எடுத்து வந்து தேக்கம்பட்டியில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

சேலம், பிப்.4: சேலம் மாநகரில் சேகரமாகும் குப்பைகளை தேக்கம்பட்டி பகுதியில் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். சேலம் தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று, திமுக ஒன்றிய கவுன்சிலர் சிவஞானவேல் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, மனு கொடுக்க 4 பேரை மட்டும் உள்ளே அனுப்பினர். அவர்கள் கலெக்டர் ராமனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சேலம் செட்டிச்சாவடியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. மாநகர் முழுவதும் சேகரமாகும் குப்பைகளை, தேக்கம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தாத்தையங்கார்பட்டி பகுதியில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் மேக்னசைட் சுரங்கங்கள் உள்ளதால், எளிதில் நிலத்தடி நீருடன் மாசுகள் கலந்துவிடுகிறது. தேக்கம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகள் கடுமையாக மாசுபட்டுள்ளது. அந்த தண்ணீரை குடிக்க முடியாத சூழலில் தவிக்கிறோம்.

இதனால், தாத்தையங்கார்பட்டி பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி பல முறை மனு கொடுத்துவிட்டோம். இனிமேல் குப்பை கொட்ட வரும் மாநகராட்சி வண்டிகளை சிறை பிடிப்போம். எங்கள் பகுதியில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.  இதேபோல், சேலம் நீர்முள்ளிகுட்டை ஊராட்சி ராஜாப்பட்டணம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், தாங்கள் வீடுகட்டி வசிக்கும் பகுதியை நெடுஞ்சாலைத்துறை காலி செய்ய சொல்லியுள்ளது. புதிதாக கோதமலையில் வீட்டு மனை தருவதாக வருவாய்த்துறையினர் கூறுகின்றனர். மலை பகுதி என்பதால், தங்களுக்கு அங்கு இடம் வேண்டாம். ராஜாப்பட்டணத்திலேயே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை ஒதுக்கி தர வேண்டும், எனக்கூறியிருந்தனர்.

சேலம் கோட்டகவுண்டம்பட்டி வசந்தம்நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பின் நலச்சங்க நிர்வாகிகள் திரண்டு வந்து, தங்கள் பகுதிக்கு சாலை, சாக்கடை கால்வாய், பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Tags : city ,Thekkampatti ,
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல்