×

சிவாடி கிராமத்தில் எரிபொருள் சேமிப்பு கிடங்கிற்கு நிலம் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு

தர்மபுரி, பிப்.4: தர்மபுரி அருகே சிவாடி கிராமத்தில் எரிபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க நிலத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுத்தனர்.  
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று தர்மபுரி கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களது ஊரில் பெரும்பாலானவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். கடந்த 2 வருடத்திற்கு முன்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம், எரிபொருள் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்காக நில அளவை செய்து நில எடுப்பு தாசில்தார் எங்களது நிலத்தை, கடந்த மாதம் 29ம் தேதி சர்வே செய்ய வந்தனர். நாங்கள் குறைந்த அளவிலான நிலத்தை வைத்து ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வாழ்ந்து வருகிறோம் என கூறியும், அதிகாரிகள் எங்கள் நிலத்தை அளந்தனர்.

இந்த சிறிய நிலத்தை தவிர எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை. எண்ணெய் நிறுவனம் புரோக்கர்கள் மூலம் உண்மைக்கு மாறான கருத்தை உருவாக்குகின்றனர். எனவே எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தையும், பாதுகாத்திட தனியார் எண்ணெய் நிறுவனத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: தர்மபுரி சிவாடி ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் திட்டத்திற்கு, இதுவரை 83 பேர் சுமார் 50 ஏக்கர் நிலம் வழங்க ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளனர். இதற்காக ₹12 கோடி தாசில்தார் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தற்போது ஒரு ஏக்கருக்கு ₹25 லட்சம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு தொழிற்சாலை சட்டப்படி நிலம் ஆர்ஜிதம் செய்தால், ஒரு ஏக்கருக்கு ₹3 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலக்கோடு அருகே கெண்டேனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் ஏராளமான பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பாலக்கோடு ஒன்றியம் கெண்டேனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட  பெருங்காடு கிராமத்தில் எஸ்டி சமுதாயத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்டவர்கள் கெண்டேனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட நிலங்களில் 40 புளியமரங்களை குத்தகைக்கு விட்டு அனுபவித்து வருகின்றனர். எனவே இந்த புளியமரங்களின் பலன்களை பெருங்காடு பகுதி மக்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : land ,fuel storage warehouse ,village ,Sivadi ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!