×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிதி நிறுவனம் மீது பண மோசடி புகார்

தர்மபுரி, பிப்.4: பாப்பிரெட்டிப்பட்டி அருகே தனியார் நிதி நிறுவனம் பல லட்சம் மோசடி செய்ததாக, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஏ.நடூர் கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:  ஏ.நடூர் கிராமத்தில் வசிக்கும் எங்களிடம், தனியார் அக்ரோ நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மாதந்தோறும் ₹500 வசூல் செய்தனர். பண முதிர்வு முடிந்ததும் முதிர்வு தொகையான ₹45 ஆயிரத்தை தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எங்கள் பகுதியில் மட்டும் சுமார் 70 பேரிடம், இதுபோல் வசூல் செய்து பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளனர். எனவே, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே போல், தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகள் இடையே டேக்வாண்டோ போட்டிகள், வரும் 4ம் தேதி  நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க, தர்மபுரி அரசு கல்லூரி சார்பில் 7 மாணவர்கள், 2 மாணவிகள் தேர்வாகி உள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் விளையாட்டு போட்டிக்கு செல்ல நிதி உதவி அளிக்கவில்லை. இதனால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில போட்டிகளுக்கு சென்ற வந்ததற்கும், நிதி உதவி அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர், கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே, 4ம் தேதி நடக்க உள்ள டேக்வாண்டோ போட்டியில், தர்மபுரி கல்லூரி சார்பில் நாங்கள் பங்கேற்க நிதி உதவியை, கல்லூரி நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Papyrepatti ,institution ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...