×

போடி பகுதியில் ஒரு போக நெல் அறுவடை நோய் தாக்குதலால் உற்பத்தி குறைந்தது

போடி, பிப். 4: போடி பகுதியில் ஒருபோக நெல்  அறுவடை தீவிரமடைந்துள்ளது. நெல்லிலி காஞ்சார நோய் தாக்குதலால் உற்பத்தி குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.போடி பகுதியிலுள்ள குரங்கணி, கொட்டகுடி, முந்தல் பரவு, முனீஸ்வரன் கோயில் பரவு, அணைக்கரைப்பட்டி, பொட்டல்களம், மீனாட்சிபுரம், தோப்புபட்டி, தீர்த்தத்தொட்டி வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேலான வயல்வெளிகளில் ஒரு போக நெல் சாகுபடி விவசாயம் நடந்து வருகிறது. நெல் பாசனத்திற்கு கொட்டக்குடி ஆற்று பாசனமே பிரதானமாக உள்ளது.

கடந்த செப்டம்பர் இறுதியில் ஒரு போகத்திற்காக நாற்றாங்கால் பாவப்பட்டு 25 நாட்களில் நடவு துவங்கி 3 வாரத்தில் நிறைவு செய்தனர். இந்நிலையில் சாப்பாட்டிற்காகவும், குண்டு அரிசியாக வருகின்ற இட்டிலிக்கு பயன்படுத்தும் இரு ரகங்கள் நடவு செய்து களைகள் பறிப்பு மருந்து மற்றும் சாணம், உரம் என ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்தனர்.பால்பிடித்து நல்ல கதிராக வளர்ந்த நிலையில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக திடீரென காஞ்சார நோய் தாக்குதல் தென்பட்டதாலும், கூடுதல் தண்ணீர் வயலில் தேங்கியதாலும் உற்பத்தி 20 முதல் 30 சதம் வரை குறைந்து விட்டது. முல்லைப் பெரியாற்று கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அறுவடைக்கு பயன்படுத்திய இயந்திரங்களை வாடகைக்கு வரவழைத்து கடந்த சில நாட்களாக நெல் அறுவடையினை விவசாயிகள் செய்து  வருகின்றனர்.  ஒரு ஏக்கருக்கு சராசரியாக 50 மூட்டைகள் வரும் நிலையில், நோய் தாக்குதலால் 30 மூட்டைகளாக குறைந்துள்ளது. அதிக நீர்வரத்தாலும், நோய் தாக்குதலாலும் உற்பத்தி குறைந்ததால் போடி பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : area ,Bodhi ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு