×

பெருந்துறை ஐஆர்டி அரசு மருத்துவ கல்லூரியில் தனியாருக்கு இணையாக கல்வி கட்டணம்

ஈரோடு, பிப். 4:பெருந்துறையில் உள்ள சாலை போக்குவரத்து மருத்துவ கல்லூரியானது போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பின்னர், இக்கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதையடுத்து ஈரோடு மாவட்டத்திற்காக அரசு மருத்துவக்கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆண்டு ஒன்றுக்கு கல்வி கட்டணமாக ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, விடுதி கட்டணம் ரூ.81 ஆயிரம், கல்லூரி கட்டணம் ரூ.33 ஆயிரம், நோட்டு, புத்தகம், மருத்துவ கல்வி சாதனங்கள் ரூ.18 ஆயிரம் என ஆண்டொன்றுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழகத்தில் உள்ள இதர அரசு மருத்துவக்கல்லூரிகளில் கல்வி கட்டணம் வெறும் ரூ.13 ஆயிரத்து 600 மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசு மருத்து கல்லூரியாக அரசு அறிவித்த நிலையில் கல்வி கட்டணத்தை மட்டும் குறைக்காமல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இணையாக வசூலிக்கப்படுவதால் இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: பெருந்துறை ஐஆர்டி அரசு மருத்துவ கல்லூரியில் பயில்பவர்கள் ஏழை, விவசாய தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகள்தான் அதிகம். அரசு கல்லூரியாக மாற்றப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்த பிறகும் அரசு கல்லூரிகளில் வசூலிக்க வேண்டிய கல்வி கட்டணத்திற்கு பதிலாக தனியார் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இக்கல்லூரியானது கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டு விட்டது. அரசு மருத்துவ கல்லூரி என்று பெயரளவில் மாற்றிக்கொண்டு கட்டணத்தை மாற்றாமல் தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. இதுதொடர்பாக, பலமுறை அரசுக்கு மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களால் எப்படி ஆண்டுக்கு ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் கட்டணமாக செலுத்த முடியும் என அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே, பிற அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தையே பெருந்துறை ஐஆர்டி மருத்துவ கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினர்.

Tags : Perundurai ,IRD Government Medical College ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...