×

ஊத்துக்கோட்டை அருகே செஞ்சியகரத்தில் சிமென்ட் சிலாப் உடைந்து கால்வாய் பலத்த சேதம்

ஊத்துக்கோட்டை, ஜன. 31: ஊத்துக்கோட்டை கிருஷ்ணா கால்வாய் முதல்  கண்ணன் கோட்டை  புதிய நீர்த்தேக்கம்  வரை கட்டப்பட்டுள்ள கால்வாய் சிமென்ட் சிலாப்புகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இதற்கு தரமற்ற கான்கிரீட் தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை கிaராமங்களை இணைத்து ₹330 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகள்  கடந்த 2014ம் ஆண்டு   தொடங்கியது. இதற்காக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.அதன் பிறகு பாதிக்கப்பட்ட விவசாயிகள் 4 மடங்கு  நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4 மடங்கு நிவாரணம் வழங்கிய பிறகுதான் கண்ணன் கோட்டையில்  நீர்த்தேக்க பணி தொடங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதனால் அந்த பகுதியில் மட்டும் பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் தாமரைக்குப்பம் பகுதியில் இருந்து திருப்பி விடப்பட்டு கரடி புத்தூர் வழியாக கண்ணன் கோட்டை  நீர்த்தேக்கத்திற்கு செல்லும் கால்வாய் பணிகள் மட்டும் கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு  இருந்தது.பின்னர்,  ஊத்துக்கோட்டை தொம்பரம்பேடு பகுதியில்  இருந்து கண்ணன் கோட்டைக்கு செல்லும் கால்வாய் பணிகள் 90 சதவீதம் முடிவு அடைந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் தமிழக தலைமை செயலாளர் பணியை பார்வையிட்டு சென்றார்.இந்நிலையில் கடந்த நவம்பர்-டிசம்பரில் பெய்த மழையால் தாமரைக்குப்பம்-கண்ணன்கோட்டை இடையில் செஞ்சியகரம் பகுதியில் கால்வாய் அமைக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் சிமென்ட் சிலாப் உடைந்து சேதமடைந்தது. மேலும் ஒரு சில இடங்களில் கால்வாயில் மண் சரிந்து கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலம் தூர்ந்துவிட்டது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள்  கூறுகையில், ‘‘ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம்  பகுதியில் இருந்து கண்ணன் கோட்டைக்கு செல்லும் வழியில் செஞ்சியகரம் பகுதியில் சாதாரண மழைக்கே கால்வாய் சேதம் அடைந்துவிட்டது. இதற்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கு மற்றும் கம்பிகளும், கான்கிரீட்டும் தரமாக இல்லாததே காரணம். மேலும் கால்வாயில் மண் சரிந்து சிறு பாலங்கள் தூர்ந்துவிட்டது’’என்றனர்.

Tags : Chenniyagara ,Uduthukottai ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே வாக்குச்சாவடி...