×

ஊத்துக்கோட்டை அருகே வாக்குச்சாவடி மாற்றத்தை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

ஊத்துக்கோட்டை, டிச. 30:  ஊத்துக்கோட்டை அருகே எல்லம்பேட்டை கிராமத்தில் இருந்து பக்கத்து கிராமமான பேரண்டூர் வாக்குச்சாவடியை மாற்றியதை கண்டித்து  சென்னை - திருப்பதி சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் ஊராட்சியில் பேரண்டூர் மற்றும் எல்லம்பேட்டை என இரண்டு கிராமங்கள் உள்ளது.  இதில், ஊராட்சி தலைவர் பதவிக்கு சத்தியா பார்த்திபன், பானுப்பிரியா, சின்ன பாப்பா என 3 பேரும், 9 பேர் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.  இதில் 3, 6, 9 ஆகிய வார்டு பகுதியில் உள்ளவர்கள் எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள  24வது வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவார்கள்.

இந்நிலையில், எல்லம்பேட்டை கிராமத்திற்கு 3 மற்றும் 6வது வார்டுக்கான ஓட்டு பெட்டியை இறக்கி விட்டு 9வது வார்டு பெட்டியை மட்டும் பேரண்டூரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு எடுத்துச்சென்று விட்டனர். இதனால், எல்லம்பேட்டையை சேர்ந்த  9வது வார்டில் உள்ளவர்கள் 192 பேர், பேரண்டூர் பகுதிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என கூறப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.   இதனால், ஆத்திரமடைந்த  எல்லம்பேட்டை கிராம மக்கள் நேற்று மாலை திடீரென சென்னை - திருப்பதி சாலையில் எல்லம்பேட்டை பகுதியில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப் - இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். சாலை  மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதை கேட்ட மக்கள் சம்மந்தப்பட்ட பிடிஒ மற்றும் தேர்தல் அதிகாரிகள் வந்தால் தான் மறியலை கைவிடுவோம் என கூறினர்.  பின்னர் பிடிஒ, அதிகாரிகள் எல்லம்பேட்டை கிராமத்திற்கு வந்து கிராம மக்களிடம் சமரசம் பேசி, இது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவு அதில் எல்லம்பேட்டை வாக்கு சாவடியில் போதிய வசதி இல்லாததால் பேரண்டூர் வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதை மாற்ற முடியாது  என கூறினர்.

இதை கேட்ட கிராம மக்கள் எங்கள் ஊரில் இருந்து 192 பேர் பேரண்டூர் கிராமத்திற்கு சென்று ஓட்டு போடவேண்டும், பேரண்டூரில் உள்ளவர்கள்  இங்கு வந்து ஓட்டு போடவேண்டும், தேர்தல் அதிகாரிகளுக்கு கூட எல்லம்பேட்டை 24வது பூத் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டுவந்த உத்தரவு சரியா அல்லது தேர்தல் அதிகாரிகளுக்கு போட்ட உத்தரவு சரியா என கேட்டனர். இதை கேட்ட அதிகாரிகள்,  தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவு போட்டது தவறுதான் இது குறித்து உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறேன் என கூறினார். பின்னர், மறியல் கைவிடப்பட்டது. இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Uduthukottai ,polling station ,
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...