×

நித்தியானந்தா சீடரை கடத்திக்கொன்றது பிரபல ரவுடியா?

வில்லியனூர், ஜன. 31:  புதுவையில் நித்தியானந்தா சீடரை கடத்தி படுகொலை செய்த சம்பவத்தில் செல்போன் நம்பரைக் கொண்டு சிறப்பு அதிரடிப்படை அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இந்த துணிகர சம்பவத்தில் கஞ்சா போதை கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அதன்பேரிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.புதுவை ஏம்பலம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). நித்தியானந்தா ஆசிரம நிர்வாகியான இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஆசிரமத்திலிருந்து வெளியேறிய வஜ்ரவேல், வில்லியனூர் பைபாஸ் ரோடு மற்றும் ஏம்பலத்தில் பேக்கரி கடை நடத்தி வந்தார்.சம்பவத்தன்று இரவு செம்பியம்பாளையத்தில் உள்ள தனது பெரியம்மா வசந்தாவிடம் ரூ.2 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு காரில் வீடு திரும்பிய நிலையில், வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கரிக்கலாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மங்கலம் காவல் நிலையத்துக்கு குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு அதிகாலையில் மிஸ்சிங் பிரிவில் வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.

இதற்கிடையே வஜ்ரவேலுவின் கார் பாகூரை அடுத்த குருவிநத்தம் சமுதாய நலக்கூடம் அருகே நிற்பதைக் கண்டு அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், காரை சோதனையிட்டனர். அப்போது காரின் பின் இருக்கையில் வஜ்ரவேல் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த காரில் பேக்கரிக்கு தேவையான கேக், பன், பாதாம்பால் உள்ளிட்ட பொருட்களும் சிதறிக் கிடந்தன.வஜ்ரவேல் தன்னுடன் எடுத்துச் சென்ற ரூ.2 லட்சம் ரொக்கம் மட்டுமின்றி பேக்கரியில் வசூலான பணமும் மாயமாகி இருந்தது. தொடர்ந்து சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், எஸ்பி ரங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து வஜ்ரவேல் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வள்ளியம்மாள் அளித்த புகாரின் மீது மிஸ்சிங் வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார், அதை கடத்தல், வழிப்பறி மற்றும் கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். சிறப்பு அதிரடிப்படையும் இவ்வழக்கு விசாரணையில் இறங்கிய நிலையில், முதல்கட்டமாக வழிப்பறி கும்பல் வஜ்ரவேலை தீர்த்துக்கட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறைக்கு எழுந்துள்ளது. அதன்பேரில் வஜ்ரவேலின் செல்போன் நம்பரில் கடைசியாக அவரை தொடர்பு கொண்டு பேசிய நபர்களின் சிலவிபரங்களை திரட்டிய காவல்துறை அவற்றைக் கொண்டு வழிப்பறி கும்பலை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை பிடிக்க சிறப்பு அதிரடிப்படை தமிழக பகுதிக்கு விரைந்துள்ளது. இதுதவிர மங்கலம் போலீசாரும் புதுச்சேரி முழுவதும் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் வில்லியனூரைச் சேர்ந்த சிலர் போலீஸ்வசம் சிக்கிய நிலையில் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.  

குருவிநத்தத்தில் கார் நின்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, சில திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளன. வஜ்ரவேலின் கார் அவ்வழியாக சென்றதும், அதில் இருந்து 7 பேர் கொண்ட கும்பல் இறங்கியதும் தெரியவந்துள்ளது. அந்த கும்பலில் பிரபல ரவுடியான அரசங்குளம் அய்யனார் போல ஒருவர் இருந்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. வஜ்ரவேல் பேக்கரி தொழில் மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலையும் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக சுமார் 2 கோடி மதிப்பில் ஒரு நிலத்தை வாங்கியுள்ளார். அதில் பாதி தொகையை கட்டிய நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்துக்காரர் வேறு ஒருவருக்கு நிலத்தை விற்க முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பாக வஜ்ரவேலுக்கும் ஒரு தரப்புக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல ஏலச்சீட்டு விடுவது தொடர்பாகவும் ஒரு தரப்பிடம் வஜ்ரவேலுக்கு விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் ரவுடி அய்யனாருக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவர் இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இந்நிலையில் ரவுடி அய்யனார் தற்போது தலைமறைவாகியுள்ளதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. ரவுடி அய்யனார் கிடைத்தால் இக்கொலையில் துப்பு துலங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Routhia ,Nithyananda ,
× RELATED 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய...