×

நீலகிரி வெள்ள நிவாரணத்திற்காக தி.மு.க. வழங்கிய ரூ.10 கோடி நிதியை பயன்படுத்த அனுமதி வழங்குவதில் தாமதம்

ஊட்டி,ஜன.31: நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரண பணிகளுக்காக தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ. வழங்கிய ரூ.10 கோடி நிதியை பயன்படுத்த நிர்வாக அனுமதி வழங்க அரசு தாமதம் ெசய்து வருவதாக கூடலூர் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார். கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த ஆகஸ்ட் மாதம் ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையின்போது ஊட்டி-கூடலூர் சாலையிலும், கூடலூர் வைத்திரி சாலையில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.600 கோடி நிதி தேவைப்படுகிறது. இது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அரசு வெறும் ரூ.78 கோடி மட்டும் நிதி ஒதுக்கியது. இதுவரை அதற்கான டெண்டர் விடப்படவில்லை. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள், உள்ளூர் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டியில் கோடை சீசன் காலமாகும். அப்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால், சாலைகளை சீரமைக்க கூடுதலாக நிதி ஒதுக்கி விரைந்து முடிக்க வேண்டும்.
நீலகிரியில் சாலைகளை சீரமைக்க ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் மற்றும் தார் கலவை போன்றவை காரமடையில் இருந்து கொண்டு வரப்படுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. 50 கி.மீ.க்குள் எந்திரம் மூலம் தார் கலவை செய்யும் பிளாண்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊட்டி, கூடலூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தி.மு.க.வை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் நிதி மற்றும் நாடாளுமன்ற எம்.பி.க்கள் நிதியில் இருந்து வெள்ள நிவாரணத்திற்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என அறிவித்தார். ராஜ்யசபா உறுப்பினர்கள் 5 பேர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதி என ரூ.10 கோடி நிதி மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. இந்த நிதியின் மூலம் மேம்பாட்டு பணிகளை துவங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்குவதில் கால தாமதம் செய்து வருகிறது. எனவே உடனடியாக அனுமதி வழங்கி நிவாரண பணிகளை துவங்க வேண்டும். தவறும்பட்சத்தில் தி.மு.க. சார்பில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும், என்றார்.

Tags : DMK ,flood relief Delay ,Nilgiri ,Rs ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு