×

மலர் கண்காட்சி பாதுகாப்பு: பணியில் 600 போலீசார்

ஊட்டி, மே 9: மலர் கண்காட்சி பாதுகாப்பு பணியில் 600 போலீசார் பயன்படுத்தப்படும் என நீலகிரி எஸ்பி தெரிவித்தார். ஊட்டியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பிற்காக ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்கு மேல் ஜூன் மாதம் வரை கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்படும். மேலும், சுற்றுலா தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள போலீசார் மட்டுமின்றி, வெளி மாவட்ட போலீசாரையும் பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில், கடந்த மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாளை மலர் கண்காட்சி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. மேலும், இம்முறை ரோஜா கண்காட்சியும் நாளை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. எனவே, அதிகளவு சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளது.

போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 600 போலீசார் பயன்படுத்தப்படும் என நீலகிரி எஸ்பி சுந்தரவடிவேல் தெரிவித்தார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது, ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து சீரமைப்பிற்காகவும் கூடுதல் போலீசார் ஈடுபடுத்துவது வழக்கம். மலர் கண்காட்சியின் ேபாது, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார், சிறப்பு காவல் படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் என 600 போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். மேலும், ஊட்டி நகரில் 1300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், பூங்கா செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகளுக்கு உதவிடும் வகையில், காவல் உதவி மையம் துவக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, ஊட்டி படகு இல்லத்திலும் ஒரு உதவி மையம் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மலர் கண்காட்சி பாதுகாப்பு: பணியில் 600 போலீசார் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris SP ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...