×

ஆலத்தூர் தாலுகா பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணி தீவிரம்

பாடாலூர், ஜன. 30: ஆலத்தூர் தாலுகா பகுதியில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் சின்ன வெங்காயம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தில் வகிக்கிறது. இதில் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பாடாலூர், இரூர், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மங்கூன், பெரம்பலூர் தாலுகாவில் உள்ள பொம்மனப்பாடி, சத்திரமனை, அம்மாபாளையம், லாடபுரம், எசனை, அனுக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 65 ஆயிரம் மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய பல்வேறு பணிகளுக்காக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை செலவாகிறது. ஒரு ஏக்கர் வெங்காயம் சாகுபடி செய்து அறுவடை செய்தால் 75 கிலோ எடை கொண்ட 50 மூட்டை முதல் 60 மூட்டை வரை கிடைக்கும். ஆலத்தூர் தாலுகா பகுதியில் அதிகளவில் வானம் பார்த்த பூமியான மானாவாரி நிலங்களே அதிகளவில் உள்ளது. ஆலத்தூர் தாலுகாவின் மேற்கு பகுதியில் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்தாலும் வானம் மழை பொழிந்தால் மட்டுமே விவசாயம் செய்யக்கூடிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். இந்த காரணத்தாலும், சின்ன வெங்காயம் பயிரிட்டு 60 நாட்கள் முதல் 80 நாட்களில் அறுவடை செய்து விடலாம் என்பதாலும் அதிக விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர்.

ஆலத்தூர் தாலுகா பகுதியில் கடந்த ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதற்கு முன் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் குழை நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டு முற்றிலும் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.

Tags : area ,Alathur Taluk ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...