×

நவீன மீன் அங்காடி வளாகத்தில் நகர வாழ்வாதார மையம் திறப்பு

புதுச்சேரி, ஜன. 30:  தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்களில் நகர வாழ்வாதார மையங்களை மத்திய, மாநில அரசுகள் சார்பில் தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட கொட்டுப்பாளையம் நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் புதுச்சேரி உழவர்கரை நகர வாழ்வாதார மையம் துவங்கப்பட்டுள்ளது. இம்மையத்தை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். இம்மையத்தின் மூலம் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில்பயிற்சி அளிக்கவும்,  மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் சேவை மையமாக செயல்படும் இந்த மையத்தின் மூலம் பிளம்பிங், எலக்ட்ரிக்கல், கார்பென்டர், வீட்டு பராமரிப்பு, அழகுபடுத்துதல், காவலர்கள், ஓட்டுநர்கள், வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆதார் அட்டை பெறுதல், பிற அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்களின் வழியே பயன்பெறுதல் போன்ற சேவைகளை குறைந்த கட்டணத்தில்  தரமான முறையில் வழங்கப்பட உள்ளது.

மேலும், தனியார் நிறுவனங்களில் வேலை தேடுவோரின் சிரமத்தை போக்க இந்த மையத்துடன் பல தனியார் நிறுவனங்களை இணைத்து அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இதே போல, நிறுவனங்களின் எதிர்பார்ப்பை அறிந்து, அதற்கேற்றபடியும், சுயதொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பலவிதமான திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சிகளான ஜிஎஸ்டி, அனிமேஷன், இணையதள வடிவமைப்பு, கணினி, செல்போன் சர்வீஸ், விற்பனை உதவியாளர், அலுவலக நிர்வாகி, மென்பொருள் உருவாக்குநர், தையல், எம்பிராய்டரி, அழகுக்கலை போன்ற இலவச பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயிற்சிகளை பெற விரும்புவோர், இம்மையத்தில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பயிற்சி பெறலாம். பயிற்சி முடித்தவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து வேலைவாய்ப்பும் பெற்றுக்கொள்ளலாம். முதல்கட்டமாக 30 பேருக்கு ஜிஎஸ்டி பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களை சந்தைபடுத்தவும் இம்மையத்தில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்எல்ஏ உள்ளாட்சி துறை இயக்குநர் மலர்கண்ணன், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : City Habitat Center ,Modern Fish Store ,
× RELATED சிந்தாதரிப்பேட்டையில் நவீன மீன்...