×

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில் தொழில் முனைவோருக்கு 30 சதவீத மானியத்தில் கடனுதவி கலெக்டர் தகவல்

திண்டுக்கல், ஜன. 23: தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் திண்டுக்கல் மாவட்ட ஊரக பகுதி தொழில் முனைவோருக்கு 30 சதவீதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் விளக்க கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து பேசியதாவது, ‘தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது ஊரக பகுதிகளில் வறுமை ஒழிப்பு எனும் செயல்பாட்டையும் தாண்டி, தொழில் மேம்பாடு மூலம் வளத்தையும், அதன் நிலைத்தன்மையையும் உருவாக்கி, மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதாகும். தமிழ்நாடு புதுவாழ்வு திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் ஆகியவைகள் மூலம் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு முதலீடு மற்றும் சமுதாய அமைப்புகளை கொண்டு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுயஉதவி குழுக்களின் குழு உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து ஊரக தொழில் முனைவோர்களை உருவாக்கி, நிதி சேவைகளை வழங்கி, இதன்மூலம் வேலைவாய்ப்பினை உருவாக்குதலாகும்.

தொழில்களுக்கு கடனுதவி வழங்கும் வங்கிகளுக்கு, கடன் தொகையில் 30 சதவீதம் நிதித்திட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டு, வங்கி இருப்பில் வைக்கப்படும். கடன் பெற்ற நபர் அல்லது குழுக்கள் கடன் தொகையில் 70 சதவீத கடன் தொகையை திருப்பி செலுத்திய பின்னர் மீதமுள்ள 30 சதவீத தொகை திட்ட நிதியில் இருந்து வங்கி கடனுக்கு ஈடாக செலுத்தி எஞ்சிய கடன் தொகையினை செலுத்துவதில் இருந்து விலக்கு பெற முடியும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களான ஆத்தூரில் 22 ஊராட்சிகள், ஒட்டன்சத்திரத்தில் 35 ஊராட்சிகள், வத்தலக்குண்டுவில் 17 ஊராட்சிகள், கொடைக்கானலில் 15 ஊராட்சிகள், பழநியில் 20 ஊராட்சிகள், வேடசந்தூரில் 22 ஊராட்சிகள், குஜிலியம்பாறையில் 17 ஊராட்சிகள் என மொத்தம் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 148 கிராம ஊராட்சிகளில் உலக வங்கி நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக 74 கிராம ஊராட்சிகளிலும், இரண்டாம் கட்டமாக 74 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளை சார்ந்த உற்பத்தியாளர்கள் இணைந்த குழு அல்லது கூட்டமைப்பு அல்லது தொழில் முனைவோர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்’ என்றார். இதில் மகளிர் திட்ட அலுவலர் சந்தோஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மாரிமுத்து, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மருதப்பன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu Rural Innovation Scheme ,entrepreneurs ,
× RELATED சுவிட்சர்லாந்தில் ‘தி ரைஸ் – எழுமின்’...