கரூர், ஜன. 21: பொதுமேலாளர் வருகையையொட்டி கரூர் ஜங்ஷன் ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் பயன்பாட்டிற்கு வருகின்றன.
கரூர் ஜங்ஷன் ரயில் நிலையம் ஏ கிரேடு ரயில் நிலையமாக உள்ளது. நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சேலம் கோட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளார். கரூர் ஜங்ஷன் ரயில்நிலையத்திற்கு வரும் 28ம் தேதி ஆய்வு செய்ய வருகை தர உள்ளார். இதனையடுத்து பராமரிப்பு வேலைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் ரயில் நிலையத்தில் 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்பணி நடைபெற்று வருகிறது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிடுவதற்காக கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை பொதுமேலாளர் துவக்கி வைக்கிறார்.
மேலும் 5 நடைமேடைகள் உள்ளன. முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக நடைமேடையில் இயங்குகின்ற பேட்டரி கார் வசதி துவக்கப்பட உள்ளது. கரூர் ரயில்வே குடியிருப்பு வளாகத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இருப்புப்பாதைகள் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமேலாளர் வருகைக்கு முன்னதாக வரும் 24ம் தேதி பணிகளை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் ஆய்வு செய்கிறார். பொது மேலாளர் வருகையின்போது புதிய வசதிகள் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.